ஹதீஸ் கலையில் ஒரு முடிவான முடிவு இல்லையா? ஹனீனா ஷரஈயா

இன்று சமூகதில், மார்க்க அறிஞர்கள் காலத்திற்கு காலம் மார்க்கவிடயமொன்றில் கருத்துமாற்றம் செய்வதை அவதானிக்கமுடிகின்றது. அதிலும் குறிப்பாக ஒரே அறிஞர் ஒருவிடயத்தை ஒரு காலகட்டத்தில் செய்யலாம் என்றும் பிறகு செய்யக்கூடாதென்றும் மாற்றிமாற்றி பத்வா கொடுக்கின்றனர். அதுமாத்திரமின்றி காலம்போகப்போக மார்கத்தை குறைத்துக்கொன்டு செல்கின்றார்கள். காரணம் கேட்டால் ஹதீஸ் பலயீனமென்று ஒத்தவார்த்தையில் பதில்சொல்லிமுடித்துவிடுகிறார்கள். அவ்வாறாயின் ஹதீஸ்கலையில் அறுதியும்இறுதியுமான ஒரு தீர்வில்லையா? இப்படியான பல்வேறுபட்ட மார்க்கத்தீர்ப்புகள் எங்கிருந்து எடுக்கப்படுகின்றன? இதன் தெளிவான நிலைப்பாடு என்ன?
அல்லாஹ்வோ அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களோ ஹதீஸ்கலை என்ற ஒன்றை ஏற்படுத்தவில்லை. இருந்தாலும் நபி[ஸல்] அவர்களுக்கு பிறகு வாழ்ந்த, நபி[ஸல்] அவர்களால் சிறப்பித்துக்கூறப்பட்ட முதல் 3நூற்றாண்டுக்குரியவர்கள் ஹதீஸ்களை தொகுத்து, ஹதீஸ்கலை என்ற ஒரு ஆய்வுத்துறையை உருவாக்கி, அதை ஆங்காங்கே எழுதிவைத்து, ஹதீஸ்களை அறிவிக்கும் அனைத்து அறிவிப்பாளர்களைப்பற்றியும் ஆராய்ந்து, அவர்கள் பற்றிய தகவல்களையும், குறைநிறைகளையும் எழுதிவைத்தனர் என முன்னர் கவனித்தோம். .
இம்ரான் இப்னு ஹுசைன் [றழி] அறிவிக்கின்றார்கள் . அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் கூறினார்கள்.
‘’என்னுடைய சமுதாயத்தில் சிறந்தவர்கள் என்னுடைய தலைமுறையினரே, பிறகு [சிறந்தவர்கள்] அவர்களை அடுத்துவரும் தலைமுறையினரே, அதற்கு அடுத்து [சிறந்த்தவர்கள்] அவர்களை அடுத்து வரும் தலைமுறையினரே [புகாரி 365௦] இவ்வாறு இறுதி உம்மத்தின் மிகச்சிறந்த மனிதர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஹதீஸ்கலையை அல்லாஹ்வால் அருள் செய்யப்பட்ட, பின் வந்த பல அறிஞர்கள் நுணுக்கமாக கற்று, பல ஆய்வுகள் செய்ததன் பின்னர் மக்களுக்கு ஒரு ஹதீஸ்விடயத்தில் தீர்ப்பு வழங்குவார்கள். அந்த முயற்சியில் அவர்கள் பலவேளை சரியாக சொல்வார்கள். சிலவேளை தவறும்விடுவார்கள், இதனை மார்க்க்கம் தூற்றவும் இல்லை; குறை சொல்லவும் இல்லை. ஏன் இதற்கும் மேலாக நபி (ஸல்) அவர்கள், இவர்கள் விடயத்தில் என்ன சொல்கின்றார்கள் என்பதை பாருங்கள்.
அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் கூறியதை தான் செவிமடுத்ததாக அம்ர் இப்னு ஆஸ் (ரழி) அறிவிக்கின்றார்கள்.
தீர்ப்பளிக்கக்கூடியவர் ஆய்வு செய்து தீர்பளிக்கும் வேளையில், அவர் சரியாக சொன்னால் அவருக்கு இரண்டு கூலிகள் இருக்கின்றன. தீர்ப்பளிக்கக்கூடியவர் ஆய்வு செய்து தீர்பளிக்கும் வேளையில் அவர் பிழையாக சொன்னால் அவருக்கு ஒரு கூலி இருக்கின்றது.
(புகாரி 7352)
ஆய்வுசெய்து முடிவெடுக்கும்வேளை, அது சரியாக இருந்தாலும், தவறிப்போனாலும் அவர் செய்த ஆய்விற்கு நன்மை இருக்கின்றது என இந்த நபி மொழி உணர்த்துகிறது. இந்த வகையில் ஓர் அறிஞர் ஒரு ஹதீஸில் இயலுமான அளவு முயற்சி செய்து, பல அறிஞர்களின் கூற்றுக்களை வாசித்து. அறிவிப்பாளர்களைப் பற்றி தேடி ஆராய்ந்து, அந்த ஹதீஸ்களில் உள்ள வெளிப்படையான மற்றும் மறைவான குறைகளை கண்டு, ஏனைய ஹதீஸ்களோடு ஒப்பிட்டுபார்த்து நுணுக்கமான முறையில் சிந்தித்து, தன்னை நம்பியிருக்கும் பாமரமக்களுக்கு ஒரு தீர்வை வழங்குவார். பிறகு காலம்போகப்போக அனுபவங்கள் அதிகரிக்க அவருக்கு ஏற்கனவே கிடைக்காத தகவல்கள் கிடைக்கப்பெற்றபின் அவருடைய பழைய தீர்விலே பிழை இருப்பதை உணர்ந்து தன் சுயநலம் பாராமலும் மார்க்கத்தை மறைக்கக்கூடாது என்பதற்காகவும் அவருக்கு சரியாக பட்ட தீர்வைமீண்டும் மக்கள் மன்றத்தில் முன்வைப்பார். இதுதான் மறுமைக்காக வாழ்ந்து மறைந்த நல்லறிஞர்களின் நிலைப்பாடாகும். இதன் போது அவரின் சம காலத்தில் வாழ்ந்த மற்ற அறிஞர்களோ அல்லது பொது மக்களோ அவரை தூற்றவுமில்லை; விமர்சிக்கவுமில்லை. ஆனால், இன்று நிலமை தலைகீழாக மாறியுள்ளது.
ஒரு அறிஞர், “மக்கள் என்ன நினைப்பார்கள்” என்றோ அல்லது “மாற்றி மாற்றி கருத்து சொன்னால் தன்னை சார்ந்தவர்கள் விலகி விடுவார்கள்” என்றோ மார்க்கத்தை மறைப்பாராயின் அது தான் பெரும் குற்றமேயொழிய எந்த கௌரவமும் பாராமல் மக்களுக்கு மார்க்கம் தெளிவாக போய் சேரவேண்டும் என்பதற்காக உண்மையை உரத்துச் சொல்லும் அறிஞரின் மீது எக்குற்றமும் இல்லை. இப்படியான நேர்மையான அறிஞர்களை நாம் பெற்றுக்கொள்வது அல்லாஹ் எமக்கு செய்த பேரருள் ஆகும். அல்ஹம்துலில்லாஹ்
என்றாலும், ஒருவர் இதுவரை ஹதீஸ்கலையில் சிறந்தவர்கள் கையாளாத விதிகளை கையாண்டு, ஆய்வு என்ற பெயரில் ஹதீஸ்களை பலவீனமாக்குவாராயின், அவரை விமர்சனம் செய்ய வேண்டும். என்றாலும் அல்லாஹ்வுக்காக தங்களை அர்ப்பணித்து, பெரும் முயற்சிக்கப்பாலும், தியாகங்களுக்கு அப்பாலும் மக்களை நெறிப்படுத்தும் அறிஞர்களை குறை கூறுவதில் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும். இவ்வாறு நியாயமில்லாமல் ஆலிம்கள் விமர்சனம் செய்யப்படும் போது பொதுமக்கள் நடு நிலைமையோடு சிந்தித்து செயல்பட வேண்டும்.
குறிப்பு: ஆய்வு என்பதும், காலத்துக்கு காலம் வேறுபட்ட தீர்ப்புகள் என்பதும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டிய விடயங்களில் மாத்திரம் (அல்லாஹ்வும் அவன் தூதரும் தீர்ப்பு சொல்லாத விடயங்களில்) தான். மாறாக, அகீதாவிடயங்களிலோ, தஃவா போங்கிலோ அல்ல. அனைத்து நபிமார்களும் போதித்தது ஒரே அகீதாவையும், ஒரே மன்ஹஜூ ம் தான். இவை இரண்டிலும் இரண்டாம் கருத்திற்கு இடமில்லை. அகீதாவில் அல்லது அகீதா மன்ஹஜில் பிளவுபட்டுக்கொண்டு இது எங்களின் ஆய்வு என தங்களை யாராவது நியாயப்படுத்துவார்களாயின் அது அவர்களின் அறியாமையாகும்