ஷைத்தானின் சபதங்களில் இதுவும் ஒன்றா?

முஜீபா ஷரஇயா

நேற்றைய வரலாற்றையும் இன்றைய நிகழ்வுகளையும் நாளைய தொழில்நுட்பத்தையும் பாமரனுக்கு எளிதில் சேர்க்கும் வலிமை மிக்க ஊடகம் என்றால் அது சினிமாதான்.அந்த அளவுக்கு சினிமா என்பது மக்களோடு மக்களாக இரண்டறக் கலந்துவிட்டது.சினிமா எனும் துறையில் நடைபெறும் அவலங்கள், ஒழுக்கச் சிதைவுகள், தற்கொலைகள், அதிகமான விவாகரத்துக்கள், ஆபாசங்கள், இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைப்பிரயோகங்கள், முக்கால் ஆபாசத்துடன் நடித்து ஆபாசத்தைத் தூண்டும் கதாப்பாத்திரங்கள், ஏகத்துவத்தைப் பாழ்படுத்தும் பாடல் வரிகள், தீவிரவாத செயல்களுக்கு வழிவகுக்கும் சண்டைக்காட்சிகள், சினிமாவைப் பார்த்துக் கொலை செய்தேன் என்று கூறும் வாலிபர்கள் இப்படிப் பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது. இதுதான் இன்றைய சினிமாவின் யதார்த்த நிலை என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

ஆபாசத்தின் இருப்பிடம் சினிமா. ஆபாசத்தை உற்றுநோக்கும் ஒருவனின் இறுதிநிலை கண்டிப்பாக விபச்சாரமாகத்தான் இருக்கும்.
إن الله كتب على ابن آدم حظه من الزنا، أدرك ذلك لا محالة، فزنا العين النظر، وزنا اللسان المنطق، والنفس تمنى وتشتهي، والفرج يصدق ذلك كله ويكذبه»
விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (பாலுறுப்பின் விபச்சாரம் மட்டுமல்ல கண்ணும் நாவும்கூட விபச்சாரம் செய்கின்றன). கண் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது, இச்சை கொள்கிறது. பாலுறுப்பு இவை அனைத்தையும் உண்மைய்யாக்குகின்றது.அல்லது பொய்யாக்குகின்றது.
(புஹாரி : 6243)

சினிமாவில் நடிப்பவர்கள் மனித சமுதாயம் முழுவதையும் அழித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை நாம் அறிந்தும் அறியாமல் இருந்துகொண்டிருக்கின்றோம்.
قال فبما اغوتني لاقعدن لهم صراطك المسقيم
“நீ என்னை வழிகெட்டவனாக ஆக்கியதன் காரணத்தால் (ஆதமுடைய சந்ததிகள்) உன்னுடைய நேரான வழியில் (செல்லாது தடை செய்ய வழி மறித்து அதில்) அவர்களுக்காக திட்டமாக அமர்ந்து கொள்வேன்”என்று (இப்லீசாகிய) அவன் கூறினான்.
(அல் அஃராப் 16)

இது சுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டபோது ஷைத்தான் அல்லாஹ்விடம் போட்ட சபதமாகும்.
ஆதமின் புதல்வர்களுக்கு அசிங்கமானவற்றை அழகாக்கிக்காட்ட இப்லீஸ் கையில் எடுத்துள்ள சாதனங்களில் மிகமுக்கியமானது சினிமா என்றே நாம் சொல்லலாம்.இந்த சினிமாவால் மனிதன் அவனுடைய பொன்னான காலத்தையும், வாழ்வையும், ஒழுக்கத்தையும் வீணடித்துக் கொண்டிருக்கின்றான்.

இந்த சினிமாவானது நம் குழந்தைகளின் நாவுகளிலும், உள்ளங்களிலும் நாம் அல்லாஹ்வைக் கொண்டு சேர்க்கும் முன்பே தன்னுடைய விஷத்தை அவர்களின் உடல் முழுவது செலுத்தி அந்தப் பிஞ்சு உள்ளங்களை நஞ்சாக மாற்றிவிடுகின்றது.இதனுடைய தீமைகளை நாம் அறிந்து மனித சமுதாயத்தைக் காப்பது எம்மீது கடமையாகும்.

தொலைக்காட்சியில் வரும் பொழுதுபோக்கு நிகழ்சிகள் ஆடல், பாடல், இசையின் ஊடாகவே ஒளிபரப்பப்படுகிறது. இசை என்பது மார்க்கத்தின் பார்வையில் தடைசெய்யப்பட்ட ஒன்றாகும்.
عن النبي(صلي) : ليكونن من امتي اقوام يستحلون الحر و الحرير و الخمر و المعازف
என் சமுதாயத்தில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம் (புரிவது) , (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக்கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள்.
(புஹாரி :5590)

அவ்வாறே பாடகிகளின் குரலைக் கேட்பதும் நடனமாடும் பெண்களைப் பார்ப்பதும் தடுக்கப்பட்ட செயல் ஆகும்.
நீர் பயிர்களை வளர்ப்பதைப் போன்று இசை உள்ளத்தில் கெட்ட உணர்வுகளையும், ஆபாசங்களையும், பெண்களின் மோகங்களையும் தூண்டுகின்றது.

சமீப காலத்தில் செல்போன், இன்றநெட்டின் சீரழிவுகள் நிறைய இருந்தாலும்கூட இதனுடைய கலாச்சாரம் பரவலாக ஆகுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் சினிமாவின் தாக்கம் மக்களுக்கு மத்தியில் இருந்திருக்கின்றது.

நாம் சுற்றுச் சூழல் மாசடைவது பற்றி அதிகம் கவலைப்படுகின்றோம்.எம் வீட்டுக்கு முன் யாராவது குப்பையைக் கொட்டினாலோ, டயரைக் கொளுத்தினாலோ, கழிவு நீரை ஊற்றினாலோ சுகாதரத் திணைக்களத்திடம் புகார் அளிக்கின்றோம். ஆனால் மனதை மாசுபடுத்தும் சூழலைப் பற்றிக் கவலைப்படுவதற்கு நாம் தயாரில்லை. மனதைப் பாழ்படுத்துவதில் பெரும் பங்கு தொலைக்காட்சிக்கும், சினிமாவுக்கும் உண்டு.

புறச் சுழல் மாசுபட்டால் அதை அகற்ற மாற்று வழியுண்டு. ஆனால் ஒரு சமுதாயத்தின் மனம் மாசுபட்டால் அந்தச் சமுதாயம் மெல்லக் கொல்லும் நஞ்சை உட்கொண்டதாகப் பொருள். படிப்படியாக அதன் அழிவு நெருங்கி வரும் அதன் நாகரீகம், பண்பாடு, மனிதாபிமானம், நாணம் எல்லாமே காலப்போக்கில் காணாமல் போய்விடும்.

எனவே கால்பங்கு நன்மை, முக்கால்பங்கு தீமை எனும் நிலையிலுள்ள தொலைக்காட்சியை நன்மைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அப்படிப் பயன்படுத்தமுடியும் என்ற நம்பிக்கை இல்லாதவர்கள் அதை முற்றிலுமாக ஒதுக்கிவிட வேண்டும். இதையே இஸ்லாம் எதிர்பார்க்கின்றது.
நாம் குடியிருக்கின்ற வீடு அல்லாஹ் நமக்கு வழங்கிய அருட்கொடை. அதை அமைதியும் அருளும் இருக்கும் இடமாக மாற்ற வேண்டும். அதில் அல்லாஹ்வுக்குப் பிடிக்காத சுழலை உருவாக்குவது நமது ஈமானைப் பலவீனப்படுத்தும். இதிலிருந்து எம்மைப் பாதுகாப்போமாக.