வலிமா எப்போது கொடுக்கப்பட வேண்டும்? – பர்வின் (ஸரயியா)

திருமண ஒப்பந்தம் நடை பெற்றவுடன் கணவன், மனைவி சந்திக்காமல் திருமண விருந்தளிக்கலாம் என்ற கருத்து சில மௌலவிமார்களால் சொல்லப்படுகிறது. இதற்கு நபி வழியில் எந்த முன் உதாரணத்தையும் நாம் காணவில்லை.

சிலர் திருமண ஒப்பந்தம் நடைபெற்று பல நாட்கள், அல்லது பல மாதங்கள், வருடங்களின் பின்னரே இணைகிறார்கள். இதற்கு இடைப்பட்ட காலத்திலே வலிமா கொடுக்கலாம் என்றும் கூறுகிறார்கள். அதற்கும் நாம் ஆதாரங்களை காணவில்லை.
என்றாலும் நபிகளாரின் வாழ்வில் வலிமா விருந்துகள் மனைவியுடன் தங்கியதன் பின்னரே நடைபெற்றுள்ளது.ஸபிய்யா (ரழி) அவர்களை திருமணம் செய்து வலிமா கொடுத்ததிலும் அதையே நாம் காணலாம்.
ஆனால் அவர்களுக்கிடையே தாம்பத்திய உறவு ஏற்பட்டதா? அல்லது இல்லையா என்பது மட்டும் அறியப்படாத ஒரு விடயமாகும். ஸைனப் (ரழி) மற்றும் ஸபிய்யா (ரழி)யை திருமணம் செய்த வேளை வந்த ஹதீஸ்கள் (மனைவியுடன் இராதரித்ததன் பின்) நபிகளார் மணமகனாக காலையை அடைந்து பின்னர் விருந்தளித்தார்’ என்ற கருத்தினையே தெளிவாக சொல்கிறது.
எனவே விருந்தளிப்பதற்கு முன் இருவரும் தனித்திருப்பது என்பது நபிவழியாக இருந்திருப்பதால் அவர்களுக்கிடையே தாம்பத்திய உறவும் கட்டாயம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதை நிபந்தனையாக கூறமுடியாது.
ஏனெனில் அவ்வாறு தனித்திருக்கும் சந்தர்ப்பங்களில் முழுமையான உறவு ஏற்படாதிருக்கவும் சந்தர்ப்பங்கள் உண்டு.
ஆக, மனைவி திருமணமான பின் கணவனிடம் ஒப்படைக்கப்பட்டு இருவரும் தனித்திருந்த பின் தன் செலவிலேயே வலீமா கொடுத்தல் போன்றவை இஸ்லாமிய திருமணத்தின் போது உயிர்ப்பிக்கப் பட வேண்டிய நபி வழி செயல்களாகும் ..
இதற்கு மாற்றமாக பெண் தரப்பினரையும் வலிமாச் செலவில் உள்வாங்கி அவர்களின் பொருளாதாரத்தில் கை வைப்பது நபி வழிக்கு முரணானதாகும்
.பெண்ணிற்கு கொடுத்த மஹர் தொகையை விட பலதரப்பட்ட சாப்பாடுகளின் பெயரால் அவர்களிடமிருந்து ஆண் தரப்பு அனுபவிப்பது ரொம்ப ரொம்ப அதிகமாகிவிட்டது. இதனால் மனைவிற்கு கொடுத்த மஹரிற்கு எவ்வித பெறுமதியும் இல்லாமல் போய் விடுகிறது.
எனவே இதில் தேவையற்ற கேள்விகளை தவிர்த்து நபிவழியில் இருந்ததை நாம் பின்பற்றி நடப்போமாக..