மாதர்களுக்கான மார்க்க தீர்வுகள் _ உம்மு ராஹா ஷரஈயா

குழந்தை பெற்றெடுத்த ஒரு பெண் எப்போது சுத்தமாகி தொழுது கொள்வாள்? அவளின் பிரசவ ருதுக்கான நாட்கள் இஸ்லாத்தில் வரையறுக்கப்பட்டுள்ளதா?

விடை:
பிரசவ ருது என்பது ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கும் நேரத்திலோ அல்லது ஓரிரு நாட்களுக்கு முன்பாகவோ அவளிற்கு வெளியாகும் இரத்தமாகும். அந்த ருது வெளியானதும் அவள் மாதவிலக்கையடைந்த ஒரு பெண்ணைப் போன்று தொழுகை, நோன்பு ஆகியவற்றிலிருந்து தவிர்ந்து கொள்வாள்.

அதே போலவே இரத்தம் துண்டிக்கப்பட்டதும் மாதவிலக்கிலிருந்து விடுபட்ட ஒரு பெண்ணைப் போன்று தன்னை சுத்தமாக்கி கடமையான குளிப்பைக் குளித்துக் கொள்வாள்.
பிரசவ விடயத்தில் அதிகபட்சமாக அல்லது குறைந்த பட்சமாக இத்தனை நாட்கள் தான் ஒரு பெண் தன்மீது தடுக்கப்பட்டவற்றைத் தவிர்ந்து கொள்வாள் என்பது பற்றி நபி (ஸல்) அவர்கள் விபரித்ததாக ஆதாரபூர்வமான எந்தவொரு செய்தியையும் நாம் காணவில்லை.
ஆயிஷா (ரழி), மற்றும் சில நபித் தோழிகளைத் தொட்டும் நபி (ஸல்) அவர்கள் பிரசவ ருதுக்கான அதிகபட்ச காலவரையறையை 40 நாட்களே என்று வரையறையிட்டதாக சில செய்திகள் பதிவாகியுள்ளது.
எனினும் அவை ஊர்ஜிதமற்ற, நம்பிக்கையில் குளறுபடியுள்ள அறிவிப்பாளர்களின் மூலம் அறிவிக்கப்பட்ட செய்திகளே ஆகும்.
ஒரு முஸ்லிம் ஆதாரமான ஹதீதுகளை மாத்திரம் பின்பற்றுவது கடமை என்பதால் ஆதாரமற்றவைகளை வைத்து எம் செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள முடியாது.
இதன்படி ஒவ்வொரு பெண்ணினதும் உடல்தகுதிக்கேற்ப பிரசவ ருது எத்தனை நாட்களுக்கு நீடிக்கின்றதோ அக்காலம் வரை தன் மீது ஹறாமான விடயங்களைத் தவிர்த்துக் கொள்வாள். பின் குளித்து தூய்மையாவாள்.
குறிப்பு:
இன்று எம் பெண்கள் தமது ருது 40 நாட்களுக்கு முன்னதாகவே துண்டிக்கப்பட்ட போதிலும் 40 நாள் அவகாசத்தை காத்திருப்பதன் மூலம் தன் மீது கடமையான விடயங்களைத் தவற விடுகின்றனர்.
இதன் மூலம் அவர்கள் தண்டனைக்குரியவர்களாக மாறிவிடலாம் என்பதை ஒரு கணம் சிந்திப்பது சிறந்ததாகும்.
மேலும் ‘நாற்பது எடுத்தல்’ என்ற பெயரில் அதற்கென பல சடங்குகளை ஏற்படுத்தி தங்களைத் தாங்களே சிரமத்தில் ஆழ்த்திக் கொள்ளும் மனிதர்களும் எம்மில் இருக்கத்தான் செய்கின்றனர்.
அவையெல்லாம் இஸ்லாம் காட்டித்தராத புதுமைகள் என்பதை நாம் உணர்ந்து செயலாற்ற வேண்டும்.
அல்லாஹ் எம்மை நேர்வழியில் நடத்துவானாக.