மாதர்களுக்கான மார்க்கத் தீர்வுகள் – விகாயா (ஷரயியா)

ஆண்கள் விருத்த சேதனம் (கத்னா) செய்வதைப் போன்று பெண்களுக்கும் கத்னா செய்ய வேண்டுமா?

சில பிரதேசங்களில் பெண்களுக்கு கத்னா செய்யாவிட்டால், அப் பெண் தூய்மையற்றவர்களாகவும், அசிங்கமானவர்களாகவும் நோக்கப்படுகின்றனரே! இது பற்றி இஸ்லாத்தின் கருத்து என்ன என்பதை தெளிவுபடுத்துங்கள்.

பதில்:
பெண்களுக்கு கத்னா செய்யும் விடயத்தில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. அதாவது கத்னா என்பது ஒரு கட்டாயப்படுத்தப்பட்ட விடயம், விரும்பத்தக்க செயல், அது ஒரு அனுமதியான காரியம், பெண்களுக்கு தேவையில்லை, என்றெல்லாம் பல கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
இப்படி வேறுபட்ட கருத்துக்களுக்கு ஆதாரமாக பல ஹதீஸ்களையும் முன்வைக்கின்றனர்.
இந்த ஹதீஸ்களின் சரியான விளக்கங்கள் மற்றும் அவைகளின் உறுதிப்பாட்டை பரிசீலிப்பதன் மூலம் நாம் ஒரு தெளிவான விளக்கத்தைப் பெற முடியும்.
ஹதீஸ் 01
நபி (ஸல்) அவர்களைத் தொட்டும் அபூஹூரைரா (ரழி) அறிவிக்கின்றார்கள். விருத்த சேதனம் (கத்னா) செய்வது, மர்ம உறுப்பின் முடியை களைந்திட சவரக்கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக் கொள்வது, மீசையை கத்த்ரித்துக் கொள்வது ஆகிய இந்த ஐந்து விடயங்களும் (நபியவர்களின்) இயற்கை மரபுகளில் அடங்கும். (ஸஹீஹுல் புஹாரி : 5889)
மேற்குறிப்பிட்ட நபி மொழியில் பொதுவாக இந்த முஸ்லிம் சமுதாயம் கடைப்பிடிக்க வேண்டிய அம்சங்கள் கூறப்பட்டுள்ளது. ‘இவற்றுள் கத்னா செய்வதும் அடங்குவதால் பெண்கள் நகம், முடி களைவதைப் போன்று தங்களுக்கும் கட்டாயம் கத்னா செய்து கொள்ள வேண்டும்’ என்று அறிஞர்கள் சிலர் வலியுறுத்துகின்றார்கள்.
இதே வேளை இந்த நபி மொழியில் கூறப்பட்ட விடயங்கள் கட்டாயம் செய்ய வேண்டிய வலியுறுத்தப்பட்ட விடயங்களா? இல்லையா? என்பதிலேயே சர்ச்சை இருந்து வருகின்றது.
ஒரு வாதத்திற்கு இவ்விடயங்கள் கட்டாயம் செய்ய வேண்டிய வழிமுறைகள், என்று வைத்துக் கொண்டாலும் ‘ஆண்களைப் போன்று பெண்களுக்கும் கத்னா செய்ய வேண்டும்’ என்று இந்த ஹதீஸிலிருந்து ஆதாரம் பிடிக்க முடியாது.
ஏனெனில் மேற்சொன்ன ஹதீஸில் இடம்பெற்றுள்ள ஐந்து விடயங்களில் ஒன்றான ‘மீசையைக் கத்தரித்தல்’ என்பது ஆண்களுக்கு மட்டுமே உரித்தான செயலாகும். எனவே இங்கு வரும் விடயம் ஒவ்வொன்றும் ஆண்களையும், பெண்களையும் சார்ந்து நிற்குமென வாதிடுவது பொருத்தமற்றதாகும். மாறாக இவற்றுள் ஆண்களுக்கு மாத்திரம் குறிப்பான விடயங்களும் ஆண் பெண் இருசாராரையும் சார்ந்து நிற்கும் விடயங்களும் வந்துள்ளன.
ஹதீஸ் 02:
அடுத்ததாக ஸஹீஹூல் முஸ்லிமில் குளிப்பு கடமையாகும் விடயத்தில் வரும் ஹதீதிலுள்ள
(கத்னா செய்யுமிடமான) ஆண்குறி, (பெண்ணின் கத்னா செய்யப்படும் இடமான பெண் குறியைத் தொட்டால் குளிப்பு கடமையாகிவிடும்’ ஹதீஸ் 02:
என்ற வாசகத்தை பெண்களுக்கும் கத்னா செய்யலாம் என்பதற்கு ஆதாரமாகக் கொள்கின்றார்கள்.
அதாவது (கிதான்) என்ற அறபுப் பதம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சேர்த்து இங்கு உபயோகிக்கப்பட்டுள்ளது. இவ்வார்த்தையின் பொருள் ‘கத்னா செய்யப்படும் இடம்’ என்பதாகும்.
எனவே ‘பெண்களுக்கு கத்னா செய்வதை அங்கீகரிக்கும் முகமாகத்தான் நபியவர்கள் ‘கத்னா செய்யப்படும் இடம்’ என்ற வாசகத்தைப் பிரயோகிக்கின்றார்கள்’ என பெண்களுக்கு கத்னா செய்வதை கட்டாயப்படுத்துபவர்கள் கருதுகின்றனர்.
இவ்வாதம் தவறாகும்.
நபி (ஸல்) அவர்களுக்கு முன்னிருந்த காலந்தொட்டு சிலர் பெண்களுக்கு கத்னா செய்யக் கூடியவர்களாக இருந்ததால் அக்காலத்து மக்களிடத்தில் பெண் குறியை ‘கத்னா செய்யுமிடம்’ (ஹிதான்) என்று அழைக்கக்கூடிய வழக்கு இருந்தது. இதனால் நபியவர்களும் அதனையே உபயோகித்துள்ளார்கள்.
மேலும் இந்த ஹதீஸில் பெண்களுக்கு கத்னா செய்வதை வலியுறுத்தும் எந்தவொரு வார்த்தையும் இல்லாததால், இதனை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
ஹதீஸ் 03:
உஸாமா அல் ஹதலி (ரழி) அவர்கள் கூறினார்கள்: ஆண்களுக்கு கத்னா செய்வது நபிவழியும், பெண்களுக்கு கண்ணியமும் ஆகும்.
என நபியவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸ் ‘முஸ்னத் அஹமத்’ கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் வரும் ‘ஹஜ்ஜாஜ் இப்னு அர்தாத்’ என்ற அறிவிப்பாளர் இருடிப்பு (அறிவிப்பாளர் தான் நேரடியாக பல ஹதீஸ்களை செவியுற்ற ஆசிரியரைத் தொட்டும் அவரிடம் நேரடியாக செவியுறாத ஒரு செய்தியை ‘அவரிடம் செவியுற்றேன்’ என உறுதியாக கூறாமல் செவியுற்றதற்கும், செவியுறாததிற்கும் இடம்பாடான வார்த்தையை உபயோகித்து அச் செய்தியை அறிவித்தல்) செய்யும் ஒருவர் ஆவார்.
இவர் இந்த அறிவிப்பில் தனது ஆசிரியரிடமிருந்து தான் கேட்டதாக தெளிவுபடுத்தவில்லையென்பதால், அவரின் இந்த அறிவிப்பை ஏற்கமுடியாது. அத்தோடு அவர் இந்த ஹதீஸில் பல குழறு படிகளை செய்துள்ளார்.
மேலும் ‘ஹஜ்ஜாஜ்’ அல்லாத வேறு சிலரால் இநத் ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர் வரிசைகளிலும் சர்ச்சைகள் மற்றும் பலவீனங்கள் நிறைந்து காணப்படுகின்றது.
எனவே இந்த ஹதிஸ்களையும் ஆதாரத்திற்கு எடுக்க முடியாது.
ஹதீஸ் 04:
அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ‘உம்மு அதிய்யா’ (ரழி) அவர்களுக்கு கூறியதாவது: ‘நீ (பெண்களுக்கு கத்னா செய்தாய் என்றால் அடியோடு நறுக்கி வெட்டி விடாதே: ஏனெனில் நிச்சயமாக அது முகத்திற்கு மிக அழகானதாகும், கணவனிடத்தில் மிகச் சிறந்ததுமாகும்’
இந்த ஹதீஸ் ‘தாரிகுல் பஃதாத்’ என்ற கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.
இதன் அறிவிப்பாளர் வரிசையில் வரும் ‘ஸாஇதா இப்னு அபீருக்காத்’ என்ற அறிவிப்பாளரினால் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்பது ‘அல் ஹாபிழ்’ இப்னு ஹஜர் போன்ற சட்டவல்லுனர்களின் கருத்தாகும்.
இவ்வாறே இது அல்லாத வேறு வழிகளில் பல்வேறுபட்ட அறிவிப்பாளர் வரிசைகளின் ஊடாக இக்கருத்தைக் குறிக்கும் அறிவிப்புக்கள் இடம்பெற்றுள்ளது.
எனினும் அவையாவும் பலவீனமானதும், அறிஞர்களின் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டவைகளுமாகும்.
ஆகவே நபியவர்கள் சொன்னதாக ஊர்ஜீதம் செய்யப்படாத செய்திகளைக் கொண்டு பெண்களுக்கு கத்னாவைக் கடமையாக்க முடியாது.
மேற்சொன்ன நபி மொழிகளைக் கொண்டே பெண்களுக்கு கத்னா மேற்கொள்ளப்படுகின்றது. என்றாலும் அவற்றுள் பெண்களுக்கு கத்னா பற்றி வந்த ஹதீஸ்கள் யாவும் பலவீனமானதும், ஏனையவைகள் ‘பொதுவாக’ கத்னா பற்றி வந்தவைகளாகும்.
உண்மையில் கத்னா என்பது ஆண்களைப் போன்று பெண்களுக்கும் கடமையான அல்லது வரவேற்கத்தக்க ஒன்றாக இருந்திருந்தால், நபி (ஸல்) அவர்கள் அதைப்பற்றி தெளிவாகச் சொல்லியிருப்பார்கள்.
மேலும் அவருடைய (நபியின்) காலத்தில் ஆண்களுக்கு கத்னா செய்யப்பட்டதாக வரும் தகலைப் போன்று பெண்களுக்கும் கத்னா செய்வதாக வந்திருக்கும். ஆனால் இப்படி எந்த ஒரு நபி வழியென எண்ணி அவரின் வழிகாட்டலுக்கு அப்பால் செல்வது தவறாகும்.
இன்று எம்மில் பலர் கத்னா என்ற பெயரில் பெண்களை வதைக்கின்றனர்.
குறிப்பாக சில நாடுகளில் கத்னாவின் பெயரில் மேற்கொள்ளப்படும் அகோரமான செயற்பாடுகளால் பெண்கள் மரணத்தை கூட தழுவ நேரிடுகின்றது.
பெண்களுக்கு கத்னா செய்வதால் பெண்களின் உணர்வுகள் கட்டுப்படுத்தப்படுகின்றது எனவும் கத்னா செய்யப்டாத பெண்கள் மானக்கேடான காரியங்களின் பால் ஈர்க்கப்படுகின்றார்கள் என்றும் சிலர் வாதிடுகின்றனர்.
அவ்வாறு ஏதாவது இருந்திருந்தால் மானக்கேட்டின் வாசலையே அடியோடு மூடிவைத்த அண்ணலார் (ஸல்) அவர்கள் இவ்வழிமுறையைக் காட்டித்தர மறந்திருக்கமாட்டார்கள்.
இன்னும் அல்லாஹ் பல உள்நோக்கங்களுடன் படைத்த மனிதனின் ஒவ்வொரு உறுப்பையும் (சதைத் துண்டையும்) அவனின் அனுமதியுடனே தவிர எவரும் அதில் கைவைக்க முடியாது.
எனவே எது அல்லாஹ்வினதும் அவனின் தூதரினதும் கட்டளை என்பதை சரிவரப்புரிந்து அதற்கப்பால் உள்ள விடயங்களை தூரந்தள்ள முயற்சிக்க வேண்டும்.
அல்லாஹ்வினதும் அவனின் தூதரினதும் வழிமுறையோடு எம் சடங்குகளையும், பழக்க வழக்கங்களையும் நிறுத்திக் கொள்வதே நேரான பாதையாகும்.