மனைவியின் வீட்டில் கணவன் வலீமா விருந்தளிப்பது நபிவழியா.? பர்வின் ஷரஈயா

உணவு , உடை போன்று தன் மனைவிக்காக ஒரு இருப்பிடத்திற்கும் ஏற்பாடு செய்யும் போதுதான் உண்மையில் ஒரு ஆண் திருமணம் முடிக்க சக்தி பெற்றவனாக ஆகிறான். அதை அவன் வசதிக் கேற்றாற் போல் சொந்த வீடாகவோ அல்லது வாடகை வீடாகவோ அமைத்துக் கொள்ளலாம். இந்த நேரத்தில் தன் இருப்பிடத்திற்கு மனைவியை அழைத்துச் சென்று பின்னர் திருமண விருந்தளிப்பது கணவனின் பொறுப்பாகும் இறை தூதரோ தோழர்களோ மனைவியின் வீட்டில் விருந்தளித்தார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

;என்றாலும் மனைவி வீட்டில் வலீமா கொடுக்கலாம் என்று கூறும் சில மௌலவிமார்கள் நபி (ஸல்) ஸைனப் (ரழி)யை திருமணம் செய்த வேளை அவரது வீட்டிலேயே தங்கி அங்கேயே விருந்தளித்ததாக சொல்கின்றனர்;. அதற்கு ஸைனப் (ரழி)யின் திருமணம் குறித்து சொல்லும் பின்வரும் ஹதீஸை ஆதாரமாக காட்டுகிறார்கள்.

நபியவர்கள் (ஸைனப் (ரழி) திருமணம் முடிப்பது சம்பந்தமான) விடயத்தை சொல்வதற்கு ஸைத்(ரழி) அவர்களிடத்தில் வருகிறார்;. அப்போது ‘என் இரட்சகன் ஏவும் வரை நான் எதையும் செய்யமாட்டேன்’; என்று கூறி ஸைனப் (ரழி) தன் மஸ்ஜிதுக்கு செல்கிறார். (அல்லாஹ் அவர்களிருவருக்கும் திருமணம் செய்து வைத்த வசனம) இறங்கியவுடன் நபிகளார் அவர்களிடத்தில் அனுமதியின்றி; நுழைந்தார்கள் .
(முஸ்லிம் ஹதீஸின் சுருக்கம்)

இவர்கள் சொல்லும் கருத்திற்கும் இந்த ஹதீஸிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஏனெனில் இது நபிகளார் ஸைனப் (ரழி)யை திருமணம் செய்த விதத்தைப் பற்றியே கூறுகிறது. அதாவது, இந்த திருமணத்தை அல்லாஹ்வே நடத்தி வைத்ததால் வலீ,ஷாஹிதை வைத்து திருமண ஒப்பந்தம் நடைபெற வேண்டிய அவசியம் இருக்கவில்லை. இதனால் நபியவர்கள் ஸைனப் (ரழி)அவர்களிடத்தில் அனுமதியின்றி நுழைந்தார்கள். நபிகளார் அவரிடத்தில் நுளைந்த பின்னர்தான்; தனக்கு திருமணம் நடந்து விட்டது என்ற விடயம் ஸைனப் (ரழி)க்கும் தெரியும். ஆக இந்த சம்பவம் திருமணம் நடைபெற்ற விதம் பற்றிய ஒரு வித்தியாசமான நிகழ்வையே சுட்டிக்காட்டுகிறது. இங்கு அன்றைய தினத்தில் அவர்களது வீட்டில் தங்கி அங்கேயே நபிகளார் விருந்தளித்தார்; என்று விளங்குவதற்கான எந்த வார்த்தையும் சொல்லப்படவே இல்லை.

மேலும் இந்த ஹதீஸ் புஹாரி மற்றும் முஸ்லிம் போன்ற இன்னும் பல கிரந்தங்களில் பதிவாகியுள்ளது. எதிலுமே ‘ஸைனப் (ரழி)யின் வீட்டில் நபிகளார் விருந்தளித்தார்’ என்று இடம்பெறவில்லை.
மாறாக இறைத்தூதர் (ஸல்)அவர்கள் வீட்டில்தான் இந்த விருந்து நடந்தது என்பதை உணர்த்துவதாகவே இந்த வாசகம் இடம் பெற்றுள்ளது.

عَنْ أَبِي قِلاَبَةَ، قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ: أَنَا أَعْلَمُ النَّاسِ بِهَذِهِ الآيَةِ: آيَةِ الحِجَابِ ‘ لَمَّا أُهْدِيَتْ زَيْنَبُ بِنْتُ جَحْشٍ رَضِيَ اللَّهُ عَنْهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَتْ مَعَهُ فِي البَيْتِ صَنَعَ طَعَامًا وَدَعَا القَوْمَ، فَقَعَدُوا يَتَحَدَّثُونَ، فَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجُ ثُمَّ يَرْجِعُ، وَهُمْ قُعُودٌ يَتَحَدَّثُونَ، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَدْخُلُوا بُيُوتَ النَّبِيِّ إِلَّا أَنْ يُؤْذَنَ لَكُمْ إِلَى طَعَامٍ غَيْرَ نَاظِرِينَ إِنَاهُ} ஜالأحزاب: 53ஸ إِلَى قَوْلِهِ {مِنْ وَرَاءِ حِجَابٍ} ஜالأحزاب: 53ஸ

அனஸ்(ரழி) அவர்கள் கூறுகிறார்கள் : ஹிஜாபுடைய வசனம் (இறங்கிய சம்பவம் பற்றி) நான் மிக அறிந்தவனாக இருக்கிறேன். ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி) இறைத்தூதரிடம் ஒப்படைக்கப்பட்ட போது வீட்டில் அவருடன் அவர்கள் இருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் உணவு (ஏற்பாடு) செய்து விருந்திற்கு கூட்டங்களை அழைத்தார்கள்.

(உணவு உண்டு முடித்த பின் வந்தவர்கள் உட்கார்ந்து கதைத்துக்கொண்டிருந்தார்கள். இது நபிகளாருக்கு சங்கடமாகவும்,சொல்வதற்கு வெட்கமாகவும் இருந்ததால் அவர்கள் அங்கிருந்து போக வேண்டும் என்பதற்காக வீட்டை விட்டு) தான் வெளியேறி மீண்டும் வீடு திரும்பினார்;கள். அப்போதும் அவர்கள் பேசிக்கொண்டேயிருந்தார்கள் அந்த நேரத்தில்தான் ‘இறை விசுவாசிகளே! சாப்பாட்டளவில் அனுமதிக்கப்பட்டாலே தவிர உணவு தயாராகுவதை எதிர்பாத்திராதவர்களாக (முன்னதாகவே )நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள்’ (ஸூரதுல் அஹ்ஸாப் 53)

என்று தொடங்கும் வசனம் இறங்கியது. நபித்தோழர்களின் இச்செய்கையை கண்டிப்பதோடு ஹிஜாபுடைய சட்டத்தையும் கூறி முடிவடையும் இவ்வசனம் ஸைனப் (ரழி)யின் திருமண தினத்திலேயே நடைபெற்றது. இந்த ஹதீஸில் ”ஸைனப் (ரழி) நபிகளாரிடம் ஒப்படைக்கப்பட்ட போது அவருடன் வீட்டில்; இருந்தார்கள்’ என வருகிறது. இது இறைத்தூதரின் வீடு தான் என்பதற்கு குறிக்கப்பட்ட வசனம் மிகப்பெரும் ஆதாரமாக இருக்கிறது. ஏனெனில் அல்லாஹ் ‘ நபியின் வீடுகளில் நுழைய வேண்டாம்’ என்றே கூறுகிறான். ஆகவே நபி(ஸல்) அவர்கள் ஸைனப்(ரழி) யின் வீட்டில் தங்கவுமில்லை. அங்கே விருந்தளிக்கவுமில்லை. மாறாக தன் வீட்டில் தான் விருந்தளித்தார்கள் என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

இதை தெளிவாக புரிந்து கொண்டால் ‘ஸைனப்(ரழி) யிடத்தில் நபிகளார் அனுமதியில்லாமல் நுழைந்தார்கள் ‘ என்ற வாசகத்திற்கும், ‘ நபிகளார் வீட்டில் தான் திருமண இரவில் ஸைனப்(ரழி) இருந்தார்கள். அங்கே தான் விருந்தும் இடம்பெற்றுள்ளது.’ என்பதை உணர்த்துவதாக வந்த வாசகத்திற்கும் மத்தியில் எந்த ஒரு முரண்பாடும் இல்லை என விளங்கிக்கொள்ள முடியும்.
அதாவது தனக்கு திருமணம் நடைபெற்றுவிட்டது என்பதை அறியாமல் இருந்த ஸைனப்(ரழி) இடத்தில் நபிகளார் விடயத்தை எத்திவைக்க அனுமதியில்லாமல் நுழைந்தன் பின் தனது வீட்டிற்கு மணப்பெண்ணாக ஒப்படைக்கப்பட்டார்கள் என்று புரிந்து கொள்வதே பொருத்தமானதாகும்.

அதனையே அவர்கள் (அலங்கரிக்கப்பட்டு) நபிகளாரிடத்தில் ஒப்படைக்கப்பட்டவேளை நபிகளாரின் வீட்டில் அவர்களுடன் இருந்துள்ளார்கள் என்பதும் சுட்டிக்காட்டுகிறது. மேலும் அதனடிப்படையில் நபி வீட்டிலேயே வலீமா விருந்தும் நடை பெற்றது என்பதையும் விளங்கிக் கொள்ள முடியும் .
நபிவழியை அறிந்து அதற்கேற்ப நம்மை மாற்றிக் கொள்ள எமக்கு அல்லாஹ் நல்லருள் பாளிப்பானாக.

பர்வின் ஷரஈயா