பேரீத்தம் பழத்தையும் நீரையும் கொண்டு தான் நோன்பு திறக்க வேண்டுமா? – மௌலவியா உம்மு ராஹா ஷரயிய்யா

நோன்பு திறப்பதற்காக எம்மில் அதிகமானவர்கள் ஈத்தம் பழத்தையும் தண்ணீரையுமே அதிகமாக
பயன்படுத்துபவர்களாக இருக்கின்றோம்.
இதற்கு அடிப்படை காரணம் ” எவர் பேரீத்தம் பழத்தைப் பெற்றுக் கொள்கிறாரோ அவர் அதைக் கொண்டு நோன்பு திறந்து கொள்ளட்டும். இல்லையெனில் நீரைக்கொண்டு நோன்பு திறக்கட்டும் ஏனெனில் நிச்சயமாக அது தூய்மைப்படுத்தக் கூடியதாகும்.” என்ற ஹதீதே.
இந்த ஹதீதின் உண்மை தன்மையை விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும். வாசித்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

” எவர் பேரீத்தம் பழத்தைப் பெற்றுக் கொள்கிறாரோ அவர் அதைக் கொண்டு நோன்பு திறந்து கொள்ளட்டும், இல்லையெனில் நீரைக்கொண்டு நோன்பு திறக்கட்டும் ஏனெனில் நிச்சயமாக அது தூய்மைப்படுத்தக் கூடியதாகும்.” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸல்மான் இப்னு ஆமிர் ரழி அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படுகின்றது.

இச்செய்தியை இமாம் இப்னு குஸைமா ஸஹீஹ், என்ற நூலிலும் இமாம் திர்மிதி ஸுனனிலும், இமாம் அஹ்மத் முஸ்னதிலும், இன்னும் பல இமாம்கள் தத்தமது நூல்களிலும் பதிவு செய்துள்ளார்கள்.

மேலும் இந்த ஹதீஸின் சில அறிவிப்புக்களில் ”உங்களில் ஒருவர் நோன்பாளியாக இருந்து பேரீத்தம் பழத்தைப் பெற்றுக் கொள்ளாவிடின் நீரைக்கொண்டு நேன்பு திறக்கட்டும்” என்ற வாசகம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையும் இமாம் திர்மிதி, இப்னு மாஜா, இமாம் அஹமத், நஸாயீ போன்ற பலர் பதிவு செய்துள்ளார்கள்.

ஸல்மான் இப்னு ஆமிர் (ரழி) அவர்களுடைய இந்த ஹதீதை அவரிடமிருந்து றபாப் உம்மு ராயிஹ் என்பவர் செவியுற்று அதை அவரிடமிருந்து ஹப்ஸா இப்னு ஸீரின் அவர்கள் செவியேற்கிறார். இவரிடமிருந்தே இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசைகள் பிரிந்து வருவதைக் காணலாம். இதில் ஸஹாபியிடமிருந்து செய்தியை அறிவிக்கும் றபாப் என்பவரின் நம்பகத்தன்மை பற்றி இப்னு ஹிப்பானைத் தவிர எந்தவொரு ஹதீஸ்கலை இமாம்களும் தெரிவிக்கவில்லை.
ஆனால் இப்படியான அறிவிப்பாளர்களின் விடயத்தில் இப்னு ஹிப்பான் பொடுபோக்குத் தன்மையுடையவர் என்பதால் இமாம்கள் இவருடைய கருத்தை பொருட்படுத்துவது கிடையாது. மேலும் இந்த ஹதீதில் வரும் ஹப்ஸா பின்து ஸீரின் மற்றும் அவரின் சகோதரர் முஹம்மது இப்னு ஸீரின் போன்றோரைத் தவிர வேறுயாரும் இவரிடமிருந்து அறிவிக்கவுமில்லை ஆகவே இவர் ”மஜ்ஹூல்” ஆன அறியப்படாத ஒருவராக இருப்பதால் இச்செய்தி பலவீனமானதாக மாறுகின்றது.

மேலும் சில அறிவிப்புக்களில் மேற்சொன்ன றபாப் என்ற இந்த அறிவிப்பாளர் துண்டிக்கபட்டு அவரிடமிருந்து அறிவிக்கும் ஹப்ஸா பின்து ஸீரின் என்பவர் இவரை விட்டுவிட்டு நேரடியாக ஸஹாபியைத் தொட்டும் அறிவிப்பதைக் காணமுடிகின்றது.

இச்செய்தியில் வரும் அறிவிப்பாளர்கள் உறுதியாக இருந்த போதிலும் இங்கு இடம்பெற்றுள்ள ”இன்கிதாஃ” (அறிவிப்பாளர் துண்டிப்பின்) மூலம் இச் செய்தி பலயீனமானதாக மாறுகிறது.

இதனை விளக்கமாகப் பார்த்தோமேயானால் அறிவிப்பாளர் ஹப்ஸா அவர்களிடம் இருந்து இச்செய்தியை அறிவிக்கும் ஆஸிம் அல் அஹ்வஸ் என்பவரைத்தொட்டும் அறிவிக்கும் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸூஃபா என்பவரிடமிருந்தே இவ்வாறு அறிவிக்கப்படுகின்றது.

ஆனால் ஆஸிமிடமிருந்து கேட்கும் ஸூப்யான் அத்தவ்ரி, இப்னு உயைனா, ஷரீக், ஹம்மாத், அப்துல் வாஹித் போன்றோர் அனைவருமே இங்கு றபாப் ஐ குறிப்பிட்டுள்ளனர்.
எனவே இங்கு பல உறுதியான அறிவிப்பாளர்களுக்கு மாற்றமாக ஒரு உறுதியான அறிவிப்பாளர் அறிவிக்கும் போது ஒருவரின் செய்தியை விட்டு விட்டு அதிகமானோரின் செய்தியை எடுக்க வேண்டும் என்ற ஹதீஸ் கலை விதியை இங்கு அமுல்படுத்த வேண்டியுள்ளது. அதன் அடிப்படையில் மேல் கூறப்பட்ட செய்திகளிலிருந்து நம்பகமான பலருக்கு மாற்றமாக அறிவிக்கும் ஷூஃபா அவர்களின் செய்தி மறுக்கப்பட வேண்டியதாகும்.

மேலும் ஷூஃபாவினுடைய மாணவர்களில் ஒருவரான அபூதாவுத் அத் தயாலீஸி என்பவர் ஏனைய மாணவர்களுக்கு மாற்றமாக இந்த அறிவிப்பாளர் வரிசையில் றபாப் என்பவரை சேர்த்தே அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷூஃபா அவர்கள் மிக நம்பிக்கையுடைய ஒருவாரக இருந்தாலும் அறிவிப்பாளர்களின் பெயர்களின் விடயத்தில் சிலவேளை தவறிழைக்கக் கூடியவராக இருந்தார். இதனை இமாம் தாரகுத்னி தனது இலல் என்ற நூலில் ”ஷஃபா ரஹ் அவர்களின் ஹதீஸ் வாசகத்தை மனனம் செய்வதில் அதிக கவனம் செலுத்தியதால் அறிவிப்பாளர்களின் விடயத்தில் குழம்பக் கூடியவராக இருந்தார்கள். எனக் கூறியுள்ளார்கள்.
இந்த அடிப்படையில் ஷூஃபா அவர்களுக்கு ஏற்பட்ட எண்னப் பிசகலாலேயே அவர் இந்த அறிவிப்பாளர் வரிசையிலிருந்து றபாப் ஐ விட்டு விட்டு அறிவித்திருக்கலாம் என எண்ணவும் வாய்ப்பு இருக்கின்றது. ஒரு வாதத்திற்கு அவர் இங்கு றபாப் ஐக் கூறியிருந்தாலும் றபாப் அறிமுகம் இல்லாத ”மஜ்ஹூல்” ஆனவர் என்பதால் இச்செய்தி மறுக்கப்பட வேண்டியதாகவே ஆகியிருக்கும்.

மேலும் மேற்சொன்ன ஹதீதின் வார்த்தைப் பிரயோகம் அனஸ் ரழி யைத் தொட்டும் அறிவிக்கப்பட்டு ஸூனன் திர்மிதி, ஸூனன் நஸாயீ, ஸஹீஹ் இப்னு மாஜாஹ் போன்ற பல கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் பேரீத்தம் பழத்தை சாப்பிடுமாறு ஏவியதாக அனஸ் றழி யைத் தொட்டும் வரும் ஹதீஸை ஷூஃபா அவர்களின் வாயிலாக ஸஅத் இப்னு ஆமிரைத் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை.

ஆனால் இந்த ஸயீத் என்பவர் உறுதியான ஒருவராக இருந்த போதிலும் இமாம் அபூஹாதம் அவர்கள் இவர் சில வேளைகளில் எண்ணப்பிசகலடையக் கூடியவர் என கூறியதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது.
ஆகையால் ஷூஃபா அவர்களைத் தொட்டும் ஸயீத் அறிவித்த ஏனைய மாணவர்கள் மற்றும் பலர் இந்த ஹதீதை ஸல்மான் இப்னு ஆமிர் ரழியைத் தொட்டும் அறிவித்திருக்க, எண்ணத்தில் பிசகல் ஏற்பட வாய்ப்புள்ள இவர் மாத்திரம் அனஸ் ரழி யைத் தொட்டும் அறிவிப்பது சிந்திக்கப்பட வேண்டிய விடயமாகும்.

மேலும் இந்த அறிவிப்பைப் போன்று (அனஸ் ரழியைத் தொட்டும்) இவருக்கு நேர்பாடாக வேறுயாரும் அறிவிக்காமல் இருப்பது இதில் குழறுபடிகள் சில நடந்திருக்கிறது என்பதை பரிந்துரைக்கிறது. இதனையே இமாம் திர்மிதி அவர்கள் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றார்கள்.

அனஸ் ரழி யின் ஹதீஸ் ஆனது இதைப் போல ஷூஃபா வைத் தொட்டும் ஸயீத் இப்னு ஆமிரைத் தவிர வேறு யாரும் அறிவிப்பதாக நாம் அறியமாட்டோம். மேலும் இது ஓர் சீரான ஹதீஸ் அல்லா” (திர்மிதி 3: 68)

மேலும் இமாம் நஸாயீ அவர்கள் இந்த ஹதீஸ் விடயத்தில் பேசும் போது ”மேலும் ஷூஃபாவைத் தொட்டும் (ஸஈத் இப்னு ஆமிர் அவர்கள்) அறிவித்து அதன் அறிவிப்பாளர் வரிசையில் குழம்பியிருக்கிறார்கள்” எனக் கூறுகின்றார். (ஸூனனுல் குப்ரா 4 : 402)

மேலும் இவர் ஏற்கனவே ஸல்மான் ரழி யின் ஹதீஸில் தனது ஆசிரியர் ஷூஃபா வின் ஆசிரியரின் விடயத்திலும் குழம்பியிருக்கிறார் எனத் தோன்றுகின்றது. அதாவது ஷூஃபாவுடைய ஏனைய மாணவர்களைப் போல் ஒரு தடவை ஹப்ஸா பின்து சீரினைத் தொட்டு அறிவித்து விட்டு மறுதடவை ஹப்ஸா விற்குப் பதிலாக காலித் அல் ஹத்தா வைத் தொட்டும் அறிவிக்கிறார். இந்த விடயத்திலும் இவருக்கு நேர்பாடாக எவரும் அறிவிக்கவில்லை.

மேற் சொன்ன குழறுபடிகளை வைத்து ஸஈத் இப்னு ஆமிரின் எண்ணப்பிசகலே ஸல்மான் றழி உடைய இடத்தில் அனஸ் றழி அவர்கள் வருவதற்கான காரணம் என்பது உறுதியாகின்றது. ஆகவே இந்த செய்தியும் பலயீனமான ஏற்க முடியாததாக மாறுகின்றது.

நபி ஸல் அவர்கள் பேரித்தம் பழத்தைக் கொண்டும் மற்றும் நீர், கஞ்சி போன்றவற்றைக் கொண்டும் நோன்பு திறந்ததாக அனஸ் றழி மற்றும் ஏனைய நபித் தோழர்களைத் தொட்டும் உறுதியான பல தகவல்கள் வருவதை நாம் அறிவோம். இருந்தாலும் அவர் பேரீத்தம் பழத்தைக் கொண்டு தான் திறக்குமாறு ஏவியதாக வரும் செய்தி உறுதியானால் அவருடைய ஏவலை நடைமுறைப்படுத்தாதவர்கள் குற்றவாளியாகக் கருதப்படுவார்கள்.

ஆகையால்தான் இந்த ஹதீஸை ஆய்வுக்குற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
அத்தோடு நபி ஸல் அவர்கள் 3 பேரீத்தம் பழத்தைக் கொண்டு நோன்பு திறப்பதை விரும்பக் கூடியவராக இருந்தார் என பேரீத்தம் பழத்தின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு அனஸ் றழி அவர்களைத் தொட்டும் வரும் செய்தியும் பலவீனமானதே. ஏனெனில் அதில் வரும் அப்துல் வாஹித் இப்னு ஸாபித் என்பவர் பலவீனமானவர்.

அல்லாஹ் எம் அனைவரின் முயற்சிகளையும் பொருந்திக் கொள்வானாக..