சமூக நல்லிணக்கத்திற்காக அல்லாஹ்வின் சட்டங்களை மறைப்பவர்களின் ஆதாரங்களும் பதில்களும் – உஸ்தாத் அன்சார் (தப்லீகி)

தஃவாக் களத்தில் ஈடுபடக்கூடிய ஜமாஅதே இஸ்லாமி, தப்லீக் ஜமாஅத், DA (தாறுல் அர்கம்) போன்ற அமைப்பினர்கள் மேலும் பல மௌலவிமார்கள் முஸ்லிம் சமூதாயத்தில் பரவியுள்ள ஷிர்க் (இணைவைத்தல்) மற்றும் பித்அத் (வழிகேடு) தான காரியங்கள் மற்றும் வரதட்சனை போன்ற சமூகக் கொடுமைகளை வெளிப்படையாக தடைசெய்யாமல் கண்டும் காணாதவர்களைப் போன்று இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

அவ்வாறான காரியங்கள் நடைபெறுகின்ற சபைகளில் அவர்கள் இருக்க வேண்டி ஏற்பட்டால் மௌனிகளாக இருந்து விடுகின்றனர்.மேலும் தனது செயலை பின்வருமாறு நியாயப்படுத்துகின்றனர். குழப்பம் கொலையை விட பெரியது’ என அல்லாஹ் கூறுகிறான்.
எனவே இவைகளைத் தடுப்பதன் மூலம் குழப்பம் வர வாய்ப்புள்ளது. அதனால் இவ்வாறான இடங்களில் மௌனியாகத்தான் இருக்க வேண்டும் என காரணம் கூறுகின்றனர்.
இவர்களின் இந்த வாதத்தில் இரண்டு வகையில் இவர்கள் பிழை செய்து வருகின்றனர்.
1- பாவத்தைக் கண்டால் எவ்வாறு நடக்க வேண்டும் என்ற அல்லாஹ்வின் தெளிவான வழிகாட்டலுக்கு மாறுசெய்கின்றமை.
2- அல்லாஹ்வின் வேத வசனத்திற்கு பிழையான விளக்கம் கொடுத்தல்.
ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் தெளிவாக கூறியுள்ளார்கள்.
தன் கையால் அதைத் தடுக்கட்டும் , அதற்கும் முடியாவிட்டால் தன் நாவால் தடுக்கட்டும் , அதற்கும் முடியாத பட்ஷத்தில் தன் மனதால் தடுக்கட்டும். அதுவே ஈமானின் மிக பலயீனமான நிலையாகும்’ தன் மனதால் தடுப்பதென்பது மனதினால் அந்த செயலை வெறுத்து அங்கே உட்காராமல் அவ்விடத்திலிருந்து வெளிநடப்பு செய்வதாகும்.
இறைவசனமும் விளக்கமும்
இந்த முறையை சூரதுன் நிஸாவின் 140 ம் வசனம் எடுத்துக் கூறுகிறது.
அல்லாஹ் கூறுகிறான்
அல்லாஹ் வசனங்கள் நிராகரிக்கப்பட்டு கேலிசெய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் உட்காராதீர்கள். ஏனென்றால் (நீங்கள் உட்கார்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றே (கருதப்படுவீர்கள்) என (அவனின் ) வேதத்தில் அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்துள்ளான்’
அல்லாஹ்வின் வசனங்களில் சொல்லப்படுகின்ற சட்டங்களும் , வரையறைகளும் மீறப்படுகின்ற போதே அங்கே பாவம் என்பது உருவாகின்றது, அப்பாவங்களை காண்கின்ற போது அதைத் தடுக்க வேண்டும் என்பதும் அல்லாஹ்வின் கட்டளை.
எனவே அல்லாஹ்வின் கட்டளைகளை அப்பாவங்களை செய்பவர்களிடம் எடுத்துச் சொல்லி அப்பாவங்களை தடுக்கின்ற போது அதை ஏற்காதவர்கள் அல்;லாஹ்வின் கட்டளைகளை மறுப்பதன் மூலம் அல்லாஹ்வின் வசனங்களை உதாசீனம் செய்தவர்களாகவே கருதப்படுகின்றனர்.
அவ்வாறு அல்லாஹ்வின் சட்டங்களை ஒரு சபையினர் புறக்கனிக்கின்ற போது அங்;கே அவர்களுடன் நாம் உட்காரக் கூடாது.
அப்பாவங்களை தடுக்காமல் அவர்களுடன் சேர்ந்து அமரும் போது அந்தப் பாவத்திற்கு அங்கீகாரம் வழங்கியதன் மூலம் அவர்களும் பாவம் செய்தவர்களாகக் கருதப்படுவர் என்பதை இந்த வசனம் எடுத்துக் கூறுகின்றது .
எனவேதான் பாவம் நடக்கின்ற இடங்களில் அதைத் தடுத்து நிறுத்த முடியாத சந்தர்ப்பமாக இருந்தால் அச்சபைகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்வதில் நாம் உறுதியுள்ளவராக இருக்க வேண்டும்.
அதுவேதான் ‘மனதால் வெறுத்தல் அல்லது மனதால் தடுத்தல்’ என்பதின் பொருளாகக் கொள்ளப்படும்.
மாற்றுக்கருத்துடையோரின் ஆதாரமும் மறுப்பும் இவ்வாறான கருத்திற்கு எதிராக மாற்றுக் கருத்துடையவர்கள் ஓர் ஆதாரத்தை முன்வைத்து தங்களின் வாதத்தை நியாயப்படுத்துகின்றனர்.
அதாவது நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்ட பின் ஆயிஸா (ரழி) அவர்களிடம் கூறுகின்றார்கள். உமது சமூகத்தாரான குறைஷிகள் ஜாஹிலிய்யத் (குப்ர் ) உடன் தொடர்புடையவர்களாக இருந்த காலம் சமீபத்தியதாக இல்லாதிருந்திருந்தால் நான் இச்சுவரை கஅபாவினுள்ளே இணைத்து அதன் கதவையும் கீழிறக்கி பூமியோடு சேர்த்ததாக என்றாலும் ( இஸ்லாத்தில் புதிதாக வந்த ) இவர்களின் உள்ளங்கள் வெறுத்து (இவர்கள் வழிதவறிப் போவதை ) நான் பயப்படுகிறேன் எனக் கூறினார்கள்.
மக்கள் குழம்பி விடக் கூடாது என்பதற்காக அம்மக்களின் மத்தியில் நிகழ்கின்ற பாவங்களை தடுக்காமல் இருப்பதற்கு ஆதாரமாக பல மௌலவிமார்கள் தங்கள் உரைகளில் இந்த ஹதீஸை முன்வைப்பதை நீங்கள் செவியுற்றிருப்பீர்கள்.
ஆனால் அவர்களின் இந்த வாதத்திற்கு இந்த ஹதீதில் எந்த ஆதாரமும் இல்லை.
மாறாக அல்லாஹ்வின் தூதர் தற்போது இருப்பதை விட ஒரு நல்ல காரியத்தை செய்ய விரும்பியிருந்தும் அந்த நல்ல காரியத்தை செய்வதால் மிக மோசமான ஓர் தீங்;கு ஏற்படலாம் என்பதைப் பயந்ததால் அந்த நல்ல காரியத்தை விட்டார்கள் என்பதையே இந்த ஹதீஸ் எடுத்துக் காட்டுகிறது.
அந்த நல்ல காரியம் கட்டாயமாக செய்யப்படவேண்டியதாக இருந்திருந்தால் மக்களுடைய குழப்ப நிலையை கருத்தில் கொள்ளாமல் நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் அதை செய்தே இருப்பார்கள் .
உதாரணமாக மிஃராஜ் விடயத்தை எடுத்துக் கொள்ளலாம்.
மக்காவிலே நபி (ஸல்) அவர்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு வானிலிருந்து வஹி வருகிறது என்பதை அந்த சமூகம் பொய்ப்பித்துக் கொண்டிருந்தது. அவரை ஏற்றுக் கொண்டவர்களும் மிகவும் குறைவானவர்களாகவே இருந்தனர்.
இந்த வேளையில்தான் ஏழு வானம் கடந்து ஒரே இரவிலே மிஃராஜ் சென்று தொழுகையை கொண்டு வந்த செய்தியை மக்களிடம் சொல்ல வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.
வானிலிருந்து தனக்கு செய்தி வருகிறது என்பதை பொய்ப்பிக்கும் அந்த சமூகத்தினரிடம் ஏழு வானத்திற்குமப்பால் ஒரே இரவில் சென்று வந்ததை சொன்னால் அவர்கள் நபியை மேலும் பொய்ப்பிப்பார்கள் .
அதற்குமப்பால் பலயீனமான ஈமான் உள்ளவர்கள் சில வேளை மார்க்கத்தை விட்டு மதம்மாறிவிடுவார்கள் என்றெல்லாம் அச்சப்படும் அந்த சந்தர்ப்பத்தில் மக்கள் மத்தியில் தனது செய்தியை முன்வைத்ததை நாம் எல்லோரும் அறிவோம்.

ஏன் ?
அதைக் கட்டாயம் சொல்லித்தான் ஆக வேண்டும் என்ற கடமைப்பாடு இருந்ததனாலேயாகும்.
ஆனால் இவர்கள் ஆதாரமாகக் காட்டுகின்ற சம்பவத்தில் அந்த கடமைப்பாடு நபி (ஸல்) அவர்களுக்கு இருக்கவில்லை. அவ்வாறு இருந்திருந்தால் மக்களின் வெறுப்;புணர்ச்சியை கருத்திற் கொள்ளாமல் அவர்கள் தம் விருப்பப்படி அந்த கஃபாவை கட்டி இருப்பார்கள்.
கஃபா அன்றிருந்த அமைப்பைப் போல் தொடர்ந்தும் அவ்வாறே இருப்பதற்கு அங்கீகாரம் இருந்ததால்தான் அதை விட நல்ல முறையில் இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் கட்டியதைப் போன்று அமைப்பதை விட்டுவிட்டார்கள்.
காரணம் அதன் விளைவு பாரதூரமாக ஆகலாம் என பயந்தார்கள் . அதாவது குப்ரிலிருந்து புதிதாக இஸ்லாத்தில் நுழைந்தவர்கள் சில வேளை மீண்டும் குப்ரில் போய்விடலாம் , அல்லது நபி (ஸல்) அவர்களை தவறாக எண்ணிவிடலாம் , அல்லது வழிகேடான சிந்தனைகளை அவர்களின் உள்ளங்களில் ஏற்படுத்தி விடலாம் என்பது போன்ற ஆபத்தான விடயங்களை பயந்ததால் அவர்கள் விரும்பிய நல்ல முறையை விட்டு விட்டு அனுமதிக்கப்பட்ட முறையைக் கொண்டு போதுமாக்கிக் கொண்டார்கள்.
எனவே இந்தச் சம்பவத்தை பாவங்களைத் தடுக்காமல் மௌனியாக இருப்பதற்கு ஆதாரமாகக் கொள்ள முடியாது. ஏனென்றால் பாவத்தைத் தடுப்பது கடமையாகும்.
அவ்வாறே கட்டாயமாக சொல்ல வேண்டிய விடயத்தை சொல்லாமல் இருப்பதற்கும் இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது. மாறாக கட்டாயப்படுத்தப்பட்ட விடயங்களை மக்களுக்கு சொல்லித்தான் ஆக வேண்டும்.
சம்பவம் தரும் படிப்பினை என்றாலும் இச்சம்பவத்திலிருந்து நாம் பெறவேண்டிய படிப்பினை என்னவென்றால் நாம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட ஓர் காரியத்தை செய்ய விரும்புகிறோம்.
என்றாலும் மக்கள் அதைத் தவறாகப் புரிந்து வழிதவறிவிடுவார்கள் என்பதைப் பயந்தால் அந்த அனுமதியான காரியத்தை விடவேண்டும் என்பதாகும் .
அல்லது ஓர் அறிஞர் அனுமதிக்கப்பட்ட ஓர் காரியத்தை செய்கின்ற போது மக்கள் அதை தவறாகப் புரிந்து கட்டாயமாகச் செய்யப்பட வேண்டிய காரியம் என விளங்கி அவர்கள் தங்கள் மீது கடமையாக்கிக் கொள்வார்கள் என்றிருந்தால் அவ்வாறான சந்தர்ப்பத்தில் அந்த அனுமதியான காரியத்தை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கும் இதை ஆதாரமாகக் கொள்ளலாம்.
இதனையும் ஓர் உதாரணத்துடன் பார்ப்போம்.
திருமணத்தில் பெண்வீடுகளில் விருந்து வழங்குகின்ற கலாச்சாரம் வலீமா’ என்பது மணமகன் மீது சுமத்தப்பட்ட நபி (ஸல்) அவர்களின் ஒரு வழிமுறையாகும்.
இதே நேரம் பெண்தரப்பினர் சந்தோசத்திற்காக விருந்து கொடுப்பது அடிப்படையில் சுன்னத்தாக்கப்படாத ஓர் விடயமாக இருந்தாலும் அனுமதியாக்கப்பட்ட ஓர் காரியமாகும். என்றாலும் இக்காலத்து சமூகத்தில் அதை செய்யாதவர்கள் கேவலமாகக் கருதப்படும் ஓர் மோசமான நிலை ஏற்பட்டுள்ளதை நாம் அறிவோம்.
அதுமட்டுமன்றி மணமகன்; மணமகளின் தரப்பினரிடமிருந்து கட்டாயப்படுத்தி எதிர்பார்க்கின்ற பெண்மீது சுமத்தப்பட்ட ஓர் விடயமாக இருப்பதையும் நாம் பரவலாக அவதானிக்கின்றோம்.
இந்த நிலையில் அனுமதியான ஓர் காரியம் கடமையான ஓர் காரியத்தைப் போன்று நம் சமூகத்தில் திணிக்கப்பட்டிருப்பதால் வசதியுடன் உள்ள பெண்தரப்பினர் சந்தோசம் எனும் பெயரில் அதைச் செய்வதற்கு முன்னாகக் கூடாது . அவ்வாறே அதற்கு அழைக்கப்படுபவர்கள் அதற்கு விடையளிக்கவும் கூடாது என்று மேலுள்ள நபி (ஸல்) அவர்களின் நடவடிக்கையை முன்னோடியாகக் கொண்டு கூறுகிறோம்.
இவ்வாறான சட்டங்களை சட்டக்கலை அறிஞர்கள் பிழைகளுக்கு வழிவகுக்கக்கூடிய அனுமதியான காரியங்களை தடை செய்தல் ” என்ற பாடத்தில் விபரிப்பதை அறிஞர்களாக உள்ளவர்கள் அறிவார்கள்.
இதனையே அறபியில் دس الذرائع (சத்துத் தராயிஃ) எனக் கூறப்படும்.
இந்த விதிக்கு மேற்சொன்ன கஃபாவை திருத்தி அமைக்கின்ற விடயத்தில் நபி (ஸல்) அவர்கள் எடுத்த முடிவு ஆதாரமாகும்.
இரண்டாம் தவறு குழப்பம் கொலையை விட பெரியது’ என அல்லாஹ் கூறுகிறான் எனக் கூறி பாவத்தைத் தடுக்கின்ற போது பாவம் செய்கிறவர்கள் குழம்பிப் போகின்ற நிலையை இவ்வசனத்தில் சொல்லப்பட்ட குழப்பமாக கருதுகின்றனர்.
குழப்பத்திற்கு இவர்கள் கொடுக்கும் இந்த விளக்கம் மிகமிகத் தவறானதாகும். மாறாக இவர்கள் பாவத்தை தடுக்காமல் மௌனமாக இருப்பதால் மக்கள் அப்பாவத்தை தொடர்ந்தும் செய்பவர்களாக இருப்பதுதான் அல்லாஹ்வின் பார்வையில் குழப்பமாகக் கூறப்படுகின்றது என்பதை இந்த வசனத்தை அதன் முன்பின்னுடன் சேர்த்து முழுமையாக நாம் பார்க்கும் போது விளங்கிக் கொள்ள முடியும்.
அல்லாஹ் கூறுகிறான்
சங்கையான மாதத்தில் யுத்தம் செய்வதைப்பற்றி அவர்கள் உம்மிடத்தில் கேட்கின்றனர். (அவர்களுக்கு) நீர் கூறும் அதிலே யுத்தம் செய்வது பெரும் குற்றமாகும். (என்றாலும்) அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களை) தடுப்பதும் , அவனை நிராகரிப்பதும் , மேலும் மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் மக்களைத் தடுத்து அதில் உள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடத்தில் மிகப் பெரியதாகும். (மக்கள் இவ்வாறு) குழப்பம் செய்வது (சங்கையான மாதத்தில் அவர்களை) கொலை செய்வதை விட மிகப் பெரிய குற்றமாகும். (அல்பகரா- 217)
இவ்வசனத்தில் அல்லாஹ் குழப்பமாக எதை கருதுகிறான் என்பதை வசனத்தின் முன் பகுதி தெளிவாகக் கூறியுள்ளது.
மக்காவில் இருந்த அல்லாஹ்வை நிராகரிக்கும் மக்கள் அவர்களும் அல்லாஹ்வை ஏற்க மறுத்ததோடு ஏனையோரும் உண்மையான தவ்ஹீதை விளங்கி அல்லாஹ்விற்கு இணைவைக்காமல் வாழ்வதை தடைசெய்தனர்.
மேலும் அல்லாஹ்வை விசுவாசம் கொண்டவர்கள் அவனுடைய தூதரின் வழிகாட்டலில் கஃபாவிற்கு வந்து வணக்கம் செய்வதையும் தடைசெய்தனர்.
அதுமட்டுமன்றி அல்லாஹ்விற்கு இணைவைக்க மாட்டோம், அவனை மட்டுமே வணங்குவோம் என்ற கொள்கை கொண்டவர்களை சித்திரவதை செய்தது மட்டுமல்லாமல் அங்கிருந்து அவர்களின் உரிமைகள் அனைத்தையும் பறித்து வெளியேற்றினார்கள்.

இதுபோன்ற இறை நிராகரிப்போர்களால் மேற்கொள்ளப்பட்ட தௌஹீதுக்கு எதிரான செயற்பாடுகளையே அல்லாஹ் இங்கு குழப்பம் என தெளிவாகக் கூறியுள்ளான். ஏனென்றால், அவர்களை கொலை செய்தவதை விட மிகப்பெரிய குழப்பமான மேற்சொன்ன விடயங்களை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டும் முகமாகவே அல்லாஹ் சுருக்கமாகவும் விரிவாகவும் ஒரே வசனத்தில் குழப்பம் என்றால் என்ன என விளங்கப்படுத்துகின்றான். எனவே இங்கு குழப்பம் என்று எதை அல்லாஹ் கருதுகிறான் என்பதை தற்போது வாசகர்கள் புரிந்து கொள்வீர்கள்.

குழப்பங்கள்:
அல்லாஹ்வின் தூதர் கொண்டுவந்த கொள்கைக்கு மாற்றமாக இன்று முஸ்லிம் சமூகத்தினர் அறிந்தோ அறியாமலோ இணைவைப்பது குழப்பம் , நபிவழியில் பள்ளிவாயலில் தொழமுற்படுவோரை பள்ளிக்கு வரவேண்டாம் என தடுப்பது குழப்பம் , நபிகளார் வழிகாட்டாத விதத்தில் இடைச்செருகலாக வந்த விடயங்களை (பித்அத்துகளை) பள்ளிவாயல்களில் வணக்கங்களாக அனுஷ;டிப்பது குழப்பம் , அல்குர்ஆனையும் ஆதாரமான ஹதீஸ்களையும் பள்ளிவாயல்களில் மக்களுக்கு விளங்;கப்படுத்தாமல் பொய்யான புராணக் கதைகள் எழுதப்பட்ட புத்தகங்களை பள்ளிகளில் வாசிப்பது குழப்பம் , அல்லாஹ்வின் மார்க்கத்தை தூய வடிவில் சொல்;ல வந்தவர்களைத் தடுத்து எங்கள் இயக்கத்தில் சேராதவர்களை அனுமதிக்க மாட்டோம் என தடைவிதிப்பது குழப்பம் , முஸ்லிம் சமூகம் பிளவுபட்டு மத்ஹப்வாதிகள் , இயக்கவாதிகள் , தரீகாவாதிகள் எனப் பிரிந்து தம்பிரிவுகளுக்காக வக்காலத்து வாங்குவது குழப்பம்.
எனவே இவ்வாறான வழிகேடுகளை தடைசெய்வதும் ,அதற்காகப் பாடுபடுவதும் குழப்பம் அல்ல.
மாறாக இதுவே சமூக சீர்திருத்தமாகும்.
இந்த வேளையில் இணைவைப்பவர்கள் ஈமானுடன் உள்ளவர்களை கொலைசெய்ய வந்தால் அவர்களை அச்செயல்களிலிருந்து தடுப்பதற்காக அவர்களுக்கு எதிராக போர் தொடுப்பதும் குழப்பம் அல்ல.

இதை விளங்கப்படுத்துவதற்காக அல்லாஹ் இறக்கிவைத்த வசனத்திற்கு தவறான விளக்கம் கொடுப்பது குழப்பம். பாவங்களை தடுக்காமல் அப்பாவங்கள் நடப்பதற்கு அங்கீகாரம் வழங்குவதும் குழப்பம்.
மேலும் அதன் மீது மௌனிகளாக இருப்பவர்கள்தான் குழப்பவாதிகளுமாவார்கள் .

அல்லாஹ் எல்லோருக்கும் விளக்கத்தை தருவானாக.