குடிசையில் அரசனாக வாழ்ந்து பார்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்..

உம்மு அய்மன் ஷரஈயா

((((மாளிகையில் நீ அடிமையாக வாழும் வாழ்வை விட ஒரு குடிசையில் அரசனாக வாழ்ந்து பார்……. )))

இன்றைய ஆணின் வீரம்,வீராப்பு,கெளரவம்
வெளிப்படுவதெல்லாம் வெளியுலகில்தான். ஆனால் அவனின் வீட்டு அறைகளோ அவற்றைப்பார்க்க ஏங்கிக்கொண்டிருக்கிறது..

சாதாரணமாக ஒரு ஆணின் கட்டளை அவன் மனைவிக்கு தடுப்புச்சுவராகும்.ஆனால் இன்று அது வேலியின் ஒரு ஈர்க்கில் அளவிற்கு கூட தடையாக இல்லை.

இன்னும் பெண்ணானவள் இயங்க கணவனின் விருப்பும் கவனிப்பும் தேவையாக இருந்தது .இன்று கணவனால் மனைவியின் விருப்பு இல்லாமல் அசையமுடியவில்லை.

அவன் மனிதர்களிடம் பெற்றுக்கொண்ட கௌரவத்தையும், சுய மதிப்பையும் மனைவியிடத்தில் இழந்து நிற்கும் அவல நிலைக்குக் காரணம் தான் என்ன?

காலநிலைமாற்றம் அன்றைய நிலைக்கும், இன்றைய நிலைக்கும் காரணமல்ல. மனநிலை மாற்றம் தான் காரணமாயிற்று. அன்றைய வாலிபர்கள் அனைவருமே வாழ்க்கை விழுமிய, விதிமுறைகளைக் கடைப்பிடித்தனர்.அனைத்து உயிரினங்களும் தனது வாழ்கையை ஆரம்பிக்கும் முன் வாழ்விடத்தை தேடிக்கொள்வதைப் போன்று அந்த வாலிபர்கள் திருமண வாழ்க்கையை ஆரம்பிக்க முன்னரே வசிப்பிடத்தை ஆக்கிகொள்ளும் மனநிலை கொண்ட வீரர்களாகத் திகழ்ந்தார்கள்.
الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما انفقوا من اموالهم (سورة النساء:34)
“ஆண்கள் பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்களாவர். ஏனெனில் அவர்களில் சிலரைக்காண (மற்ற) சிலரை அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதாலும், (ஆண்களாகிய) அவர்கள் தங்கள் செல்வத்திலிருந்து (பெண்களுக்காகச்) செலவு செய்வதாலுமாகும். (சூரதுன் நிஸா: 34 )

என்ற வசனம் அந்த அடிப்படையை பறைசாற்றவில்லையா? காலம் செல்லச் செல்ல இந்த அடிப்படை அஸ்திவாரங்களெல்லாம் நாகரீகங்கள்என்ற பெயரில் தோன்றிய சீரழிவுகளால் மூடப்பட்டு போயின.

அதன் பின் ஒரு ஆண்மகன் நாகரீகமாகக் கருதியதெல்லாம் அவனின் திருமணத்தின் போது மணமகனின் தரப்பால் ஒரு குறிப்பிட்ட தொகை விரும்பியோ விரும்பாமலோ அவனுக்குக் கொடுக்கப்படுவதைத் தான்.

அதை அடுத்த நாகரீக வளர்ச்சி அந்தத்தொகையையும் சேர்த்து வளர்த்து விட்டது. அது பின்னர் தொழிலாகவும், வாகனங்களாகவும், வீடு வாசலாகவும் உருவெடுத்தன. அப்போது தான் பிறர் சம்பாத்தியத்தில் சுகமனுபவிக்கும் (அ)நாககரீகத்தை தனக்கக்கினார்கள்.

ஒரு ஆண் தனது வீட்டில் தன் மனைவியை வைத்து சுய சம்பாத்தியத்தில் வாழ்க்கை நடாத்தும் போது தானாக அவனுக்குரிய சுயமதிப்பும் , மரியாதையும், கடமைப்பாடும் மனைவியானவளிடத்தில் வந்து ஒட்டிக்கொள்கிறது.

அவனது வீடு குடிசையாக இருந்த போதிலும், அங்கு அரசனாக வாழ முடிந்தது. ஆனால் இன்றோ அவனுக்கு அவனின் வீடு மாடா மாளிகையாக இருந்தும் அடிமையாக வாழும் நிலை. இந்த அவல நிலையோ பல இளைஞர்களில் இன்று தாக்கம் செலுத்தி விட்டது.

எங்கள் புனித மார்க்கமான இஸ்லாம் இதை அணுவளவு கூட அனுமதிக்கவில்லை. மாறாக அவமதிக்கின்றது. எம்மைப்படைத்த அந்த வல்லவனால் எமக்காக முன்மாதிரியாக அனுப்பப்பட்ட தூதர் (ஸல்) அவர்கள் கட்டுத்தந்த திருமணத்தை மையமாக நோக்கினால் அத்திருமணத்தில் எவ்வித வீண் செலவுகளோ ( குறிப்பாக பெண் வீட்டாருக்கு ) இருப்பதாக பெருமானார் (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டவில்லை.

இன்னும் இஸ்லாம் ஒரு ஆணுக்கு மனைவியாகப்போகும் பெண்ணுக்கு குறிப்பிட்ட தொகை ( மஹர் என்ற மணக்கொடை ) மணமகனிடமிருந்து மனமுவர்ந்து கொடுக்கப்பட வேண்டும் என்று கற்றுத்தருகின்றது.
وءاتوا النساء صدقتهن نحلة فان طبن لكم عن شىء منه نفسا فكلوه هنيا مريا (سورة النساء:4)
நீங்கள்[ திருமணம் செய்துகொண்ட] பெண்களுக்கு அவர்களின் மஹர்களை [திருமணக்கொடைகளை] மகிழ்வோடு கொடுத்து விடுங்கள். அதிலிருந்து ஒரு சிறியதை அவர்கள்[ தங்கள்] மனமாற உங்களுக்கு விட்டுக்கொடுத்தால் அதனை நீங்கள் தாராளமாக மகிழ்வோடு புசியுங்கள். [சூரதுன் நிஸா ; 04]

பெண் தரப்பிலிருந்து எடுக்கப்படும் சொத்து – “பரிசு’ என்ற பெயரில் உருமாறியும் உங்களை ஏமாற்றலாம் என்பதை மறந்துவிடாதீர்கள். ஏனெனில், வற்புறுத்தி ஒருவரைத் தற்கொலை செய்ய வைத்தாலும் அது கொலையாகவே கருதப்படும். பெயர் வேண்டுமானால் தற்கொலையாக இருக்கலாம்.

சீதனமென்பது இஸ்லாமிய வழிமுறை அல்ல, என்று உணர்ந்த ஈமானிய உள்ளம் கொண்ட சகோதர, சகோதரிகளும் இந்த ஏமாற்றத்திற்கு ஆளாகின்றனர். அதுதான் தன் மனைவிக்குச் சொந்தமான வீட்டில் அவரை அமரச்செய்திருக்கிறது. ஆனால் இது முற்றிலும் மார்க்கத்திற்கு முரணான ஒரு செயல்தான் என்பதை நாம் உணர வேண்டும்.

ஆரம்பத்தில் சொல்லப்பட்ட இறைவசனமானالرجال قومون على النساء ‘’ஆண்களே பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்கள்’’ எனும் வசனம் இதற்கு போதுமானது .ஒரு மனிதன் தன் மனைவியை முற்றிலும் தன் சுய உழைப்பிலும், பொறுப்பிலும் தான் இருக்கும் இடத்தில் வைத்துக்கவனித்தால் தான் ‘அவன் அவளை நிர்வகிக்கின்றான்’ என்று கருதப்படும்.

மாறாக அவன் தன் மனைவியின் சொத்தில் பங்கு கொண்டால் அவன் அங்கு மனைவிக்கு வெறும் துணையாகத்தான் இருக்கிறானே தவிர அவளை நிர்வகிப்பவனாகமாட்டான். அதற்காகத்தான் அல்லாஹ் ‘ஒரு ஆணானவன் பெண்ணுக்கு துணையாக வேண்டும் என்று கூறாமல் பெண்ணை நிர்வகிக்கக்கூடியவன்’ என்று கூறுகிறான். இந்த இறைவசனத்திற்கு மாறாக மனைவியின் வீட்டில் வாழ்பவர்கள் நாகரீகமான கோழைகளாகத்தான் வாழ்கிறார்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

ஆக ஒரு ஆண் தனது சக்திக்குத்தக்கவாறு [குடிசையாக இருந்தாலும்] அவனது சொத்தில் மனைவியை வைத்து வாழ்கையை நகர்த்துவதே உன்னத மார்க்கம் சொல்லித்தந்த நாகரிகமாகும். இதற்கு மாற்றமாக செயற்படும் எவராக இருப்பினும் இஸ்லாமியக்கண்ணோட்டதில் நாகரீகமற்றவரேதான்.

மேலும் கணவனானவன் அவன் சக்திக்குத்தக்கவாறே மனைவியை நிர்வகிக்கும் போது மனவியானவளின் கடமைப்பாடு, அதில் திருப்தி காணுவதுதான்.அதற்கு மாற்றமாக அவளின் வீட்டாரிடமிருந்து எதையும் சொந்தமாக்க நினைத்தாலோ/ கணவனுக்கு அவ்வாறு செய்யத்திணித்தாலோ அவளும் இந்தப்பாவத்திற்கு பங்குதாரியாவாள்.

மனைவியின் வீட்டிலிருப்பது முற்றிலும் முறையற்றது என்பதற்கு பெருமானார் [ஸல்] அவர்களின் திருமன வாழ்வும் சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும்.எம் தூதர் [ஸல்] அவர்களின் திருமணங்களில் மனைவியின் தரப்பிலிருந்து ஒரு பைஸா கூட அவர் எடுக்கவில்லை. ஆனால், மஹர்த்தொகையை நிறைவாக நிறைவேற்றினார்கள். அவருடைய மனைவிமார்களை அவருடைய வீட்டில்தான் வைத்திருந்தாரென்பதும் பல முறையில் நிரூபணமாகிறது.

நபியின் மனைவியான ஆயிஷா [றழி] யைப் பற்றி வந்த அவதூறு சம்பந்தமான ஹதீஸில்[ அந்த அவதூறை அல்லாஹ் தூய்மைப்படுத்தமுன் ] ஆயிஷா [ரழி] அவர்கள் சில மனக் கஸ்டங்களால் தந்தை அபூ பக்கர் [ரழி]யின் வீட்டிற்குச் செல்ல தன் கணவனிடம் அனுமதி வேண்டினார்கள், எனில் ஆயிஷா [ரழி] அவர்கள் இருந்தது, தூதர்[ஸல்] அவர்களின் வீட்டில் தான் என்பது உறுதியாகிறது .
يا ايها الذين امنوا لا تدخلوا بيوت النبي ….. (سورة الاحزاب : 53)ا
எனும் வசனத்தில் ‘நபியின் மனைவிமார்களின் வீடு’ என்று கூறப்படாமல் [நபியின் வீடுகள்- بيوت النبي ] என்று கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

இன்னும் எமது மார்க்கம் ஒரு ஆண் தனது மனைவியை மணவிலக்கு [தலாக் ] சொன்ன பின்னரும் [இத்தாக்காலம் முடியும்வரை ] அவளின் சொந்த வீட்டிற்கு அனுப்ப அனுமதிக்கவில்லை என அல்லாஹ் கூறுகிறான்:
‘உங்களுடைய சக்திக்குத் தக்கவாறு நீங்கள் குடியிருந்துவரும் இடத்தில் [இத்தாவில் இருக்கும் பெண்களாகிய] அவர்களை குடியிருக்கச் செய்யுங்கள். [அப்பெண்களிடமிருந்து ஈடாக எதையும் பெறவோ /நிர்ப்பந்தமாக அவர்கள் வெளியேறிவிடவோ இவ்வாறான பல சூழ்நிலைகளை உருவாக்கி] அவர்களுக்கு நீங்கள் நெருக்கடியை உண்டாக்குவதற்காக அவர்களுக்கு தொல்லை கொடுக்காதீர்கள்.’

இப்படி ஒருபுறமிருக்க தலாக்கின்றி சேர்ந்து வாழும் பொழுதே மனைவி மட்டுமன்றி தாமும் அவளோடு அவளின் வீட்டில் இருப்பது எவ்விதத்தில் நியாயமாகும்? என்னுடைய மனைவியும் அவளின் குடும்பத்தாரும் மனமுவந்து எனக்கு அன்பளிப்பாக அவ்வீட்டை தந்து விட்டார்கள் என்று நீ காரணம் காட்டினாய் எனில் உன்னைப் பார்த்து வட்புறுத்தி சீதனம் வாங்கக்கூடிய ஒரு சமுதாயம் தலை நிமிர்ந்து நடக்க தொடங்கும் என்பதை மறந்துவிடாதீர்;

இன்னும் கௌரவமான முறையில் களவாடும் கூட்டத்திற்கு தோற்கொடுத்த பெருமையை தனதாக்கிக்கொள்ளாதீர். அதே போல் அணைந்து வரும் சீதனம் எனும் தீயை அன்பளிப்பு எனும் பெயரில் மூட்டிவிட்ட பெருமைக்கு சொந்தக்காரராக மாறாதீர்.

தவறு என்று தெரிந்த பின்னரும் மனைவியின் வீட்டில் தவறான முறையில் நாமிருக்கும் ஒவ்வொரு நொடியும் எம் நிலையான இருப்பிடத்தை தவறான முறையில் நரகில் தேடிக்கொள்ளலாம். அல்லாஹ் எம் அனைவரையும் அத்துர்ப்பாக்கிய நிலைமையிலிருந்து காப்பானாக! இப்பாவத்தை தொடங்கி வைத்த பாவிகளின் பட்டியலிலிருந்து எம்மைபாதுகாத்து இந்தப் பாவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து சந்ததியைப் பாதுகாத்த புனிதர்களாவோம்.

தற்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம் முழுக்க முழுக்க எமது சொத்தில் மனைவியை வைத்திருப்பதே. இந்த திடீர் மாற்றம் சில கஷ்டங்களைத் தரத்தான் செய்யும். ஆனால் உலகக் கஷ்டங்களைப் பயந்து மறுமை வேதனையைச் சுவைக்க எந்த மனித உள்ளமும் தயாராகாது சகோதரர்களே.

அதே இந்த எமது மாற்றம் அல்லாவுக்காக இருக்கும் போது அந்தப் பாதையில் வரும் அனைத்து நெருக்கடிகளும், கஷ்டங்களும் சிறந்த சம்பாத்தியத்திற்கான விளைநிலம் ( மறுமையில் ) என்பதை மறக்காதீர்கள்.

ஏனெனில் அல்லாஹ்வுக்காக கஷ்டங்களைத் தாங்கிய எம் தூதர் ( ஸல் ) அவர்களைத்தான் அல்லாஹ் மதீனத்து நகரின் ஜனாதிபதியாக் கினான், இன்னும் அல்லாஹ்வுக்காக தனது கஷ்டங்களில் பொறுமை கொண்ட யூசுப் ( அலை ) யைத் தான், அல்லாஹ் ஒரு நாட்டின் கவர்ணராக்கினான்.

ஆக, அதே இரட்சகனுக்குக் கட்டுப்பட்டு கஷ்டங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் உள்ளங்களுக்கும் அல்லாஹ் தரவிருக்கும் வெற்றி எதுவாகவுமிருக்கலாம். அல்லாஹ்வைப் பயந்து நடந்து கொள்ளுங்கள். நீங்களே சிறந்தவர்கள்.