எது நேர்வழி??

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு !

எது நேர்வழி ~~~~~~?

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் !

அன்பிற்கினிய ஈமானிய உள்ளங்களே ! நாம் வாழும் உலகில் இன்று இஸ்லாம் மிக வேகமாக பரவி வருவதைக் காண்கின்றோம். அதே போல உலகின் எந்த மூலையிலும் முஸ்லிம்கள் இருப்பதையும் காண்கின்றோம். இருப்பினும் அவர்கள் அனைவரும் ஒரு கொள்கையில் இல்லை என்பதும் நாம் அறிந்த விடயமே! : பல குழுக்கள், பல ஜமாஅத்கள், பல்வேறுபட்ட ஒன்றுக்கொன்று முரணான பிரச்சாரங்கள்………….

இந்தக் குழுக்கள் அனைத்துமே சரியானது இல்லை என்பதும் ,அதில் ஓன்று மட்டுமே சத்தியம் என்பதும் அனைவரும் ஏகோபித்த ஓர் விடயம். ஆனால் அது எது என்பதுதான் பலரின் கேள்வி. ஏனென்றால் ஒவ்வொரு குழுவும் சொல்கிறது “ நாங்கள்தான் அந்த சத்தியவாதிகள் என்று “. ஒவ்வொருவரும் முன்வைக்கும் ஆதாரம் “ குர்ஆனும் ஹதீஸும்தான்”.

நிலைமை இப்படியிருக்க ஒரு பாமரமகன் அந்த சத்தியவழி எது என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது ????? அதற்கு ஒரே ஒரு வழி உள்ளது : “ நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் எதில் இருந்தார்களோ “ அதுதான் வழி.
قل هذه سبيلي أدعوا إلى الله على بصيرة أنا ومن اتبعني………”
நபியே! நீர் கூறுவீராக “இதுதான் அல்லாஹ்வின் பக்கம் நான் அழைக்கும் எனது பாதை, நானும் என்னைப் பின்பற்றுபவரும் ஞானத்தில் இருக்கிறோம்……… (யூசுப் : 108 )
இன்னும் அல்லாஹ் கூறுகின்றான் :
وأن هذا صراطي مستقيما فاتبعواه ولا تتبعوا السبل فتفرق بكم………
இன்னும் இதுதான் எனது நேரான பாதை இதையே பின்பற்றுங்கள் ,மேலும் மற்றைய பாதைகளைப் பின்பற்ற வேண்டாம்……. (அல் அன்ஆம் -153 )
மேலுள்ள அன்ஆமினுடைய வசனத்தில் நாம் இரண்டு சொற்களை கவனிக்க வேண்டும் :

நேர்பாதையை அல்லாஹ் “ صراط” என ஒருமையிலும் , தவறான பாதைகளை السبل”” என பன்மையிலும் சொல்லியிருக்கின்றான்.

எனவே சத்தியம் ஓன்று, அசத்தியம் பல என்பதற்கு இதுவே போதிய சான்றாகும். இக்கூற்றிற்கு அன்றாடம் எம் வாழ்வில் காணும் விடயங்களே பெரிய சான்றாகும். அதில் ஒன்றை மாத்திரம் பார்ப்போம் : உதாரணமாக , “ ஒரு இஸ்லாம் பாட ஆசிரியர் 20 பிள்ளைகளுக்கு ஒரே கேள்வியைக் கேட்கிறார்.
கேள்வி: நபி (ஸல் )அவர்களின் முதல் மனைவி யார் ?
இதற்கான விடை: கதீஜா (ரழி) என்பதாகும். இக்கேள்விக்கு 12 பிள்ளைகள் கதீஜா(ரழி) என்றும் ஏனைய 8 பிள்ளைகள் ஆயிஷா, ஹப்ஸா ,சவ்தா (ரழி)……. என பல பிழையான விடைகள் சொன்னார்கள். இதில் நாம் கவனிக்க வேண்டிய விடயம் “ கேள்வி ஒன்றுதான் ஆனால் பதில்கள் பல .அதிலும் சரியான பதில் ஒன்றே ஒன்றுதான் ஆனால் பிழையான பதில்கள் பல “. அது மட்டுமல்ல பிழையான பதில் சொன்ன அனைவரும் அது பிழை என்று எண்ணி சொல்லவில்லை. அவர்களின் எண்ணப்படி அது சரியே .

இதில் ஆசிரியரில் தவறில்லை. அவர் அனைத்துப் பிள்ளைகளுக்கும் ஒரே நேரத்தில் கற்றுக் கொடுத்தவர்; மாறாக அம்மாணவர்களின் விளக்கத்தில்தான் தவறுள்ளது . இவ்வாறுதான் எத்தனை குழுக்கள் தோன்றினாலும் சத்தியம் ஒன்றுதான். ரசூலுல்லாஹ் போதித்த மார்க்கத்தில் தவறில்லை . அதை விளங்கியவர்களின் விளக்கத்திலும் சில வேளை அதை விளங்கப்படுத்தியவர்களின் விளக்கத்திலும் தவறுகள் இருக்கலாம்.

இவை அனைத்திற்கும் மேல் நேர்வழி என்பது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வரும் அருள். அதை தான் நாடியவருக்கு மாத்திரம்தான் கொடுப்பான். இதில் நமது கடமை அல்லாஹ்விடம் நேர்வழியை கேட்பது; அதற்காக முயற்சிப்பது. அல்லாஹ்வின் விடயத்தில் முயற்சிக்கும் எவரையும் அவன் கைவிடமாட்டான் .
والذين جاهدوا فينا لنهدينهم سبلنا…..
எங்கள் விடயத்தில் எவர்கள் முயற்சிக்கிறார்களோ அவர்களுக்கு எங்கள் வழிகளை நாங்கள் காட்டுவோ
(அல் அன்கபூத் -68 )”

எனவே நேர்வழி எது என்று தெரியாமல் தடுமாறும் சகோதரர்களே !விடாமல் முயற்சிப்போம், மார்க்கத்தை தெளிவாகக் கற்றுக் கொள்வோம் . அல்லாஹ் கட்டாயம் உதவி செய்வான். அவனே போதுமானவன். பின்வரும் துஆவை ஓதிக் கொள்ளுங்கள்.
اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى . ..
பொருள் :இறைவா ! உன்னிடம் நான் நேர்வழியையும் ,இறையச்சத்தையும் ,பத்தினித்தனத்தையும் ,போதுமான செல்வத்தையும் கேட்கிறேன்
நாங்கள் கருத்து தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொரு தொழுகையிலும் ஒவ்வொரு ரக்அத்திலும் நாம் நேர்வழியை கேட்டுக் கொண்டே இருக்கின்றோம்.நாம் ஓதிவருகின்ற அவ்வாசகத்திலே எது நேர்வழி எனும் கேள்விக்கு விடையும் உள்ளது. அவ்வசனம் பின்வருமாறு ,
اهدنا الصراط المستقيم ,صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين .
இறைவா ! நீ யார் மீது கோபப்பட்டாயோ அவர்களின் வழியுமல்லாத ,இன்னும் வழி கெட்டவர்களின் வழியுமல்லாத ,நீ அருள் புரிந்தவர்களின் வழியான நேரான வழியைக் காட்டுவாயாக ! ( அல் பாத்திஹா -6 ,7 )

எனவே நேர்வழி என்பது அல்லாஹ்வின் அருளைப் பெற்ற நபிமார்கள், தூதர்மார்கள், நல்லவர்களின் வழியாகும் , மாறாக அல்லாஹ்வின் கோபத்தை யும், சாபத்தையும் பெற்ற யஹூதிகளின் வழியுமல்ல , வழி தவறிப்போன நசாராக்களின் வழியுமல்ல என்பதை மனதில் பதிய வைத்து, அவ்வழியில் மரணம் வரை நாம் பயணிக்க அல்லாஹ் அருள் புரிவானாக !
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهبنا من لدنك رحمة إنك أنت الوهاب .
எங்கள் இரட்சகனே ! எங்களுக்கு நேர்வழி காட்டியதன் பின்னர் எங்கள் உள்ளங்களை சறுக வைத்து விடாதே .உன்னிடமிருந்து எங்களுக்கு அருள் வழங்குவாயாக ,நிச்சயமாக நீ மிகக் கொடையாளன் ஆவாய் . (ஆளு இம்ரான் -8 ).
நேர்வழி கிடைத்ததன் பின் உள்ளங்கள் சறுகாமல் இருக்க மேலுள்ள துஆவையும் ஓதிக் கொள்வோம் .
நம் அனைவருக்கும் அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!, இதில் அனைவருக்கும் பிரயோசனத்தை ஆக்குவானாக !